ஹாபிஸ் நசீரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யுமாறு வெள்ளிக்கிழமையே அறிவித்து விட்டோம்: மு.கா. செயலாளர்

🕔 October 9, 2023

– முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும், சுற்றாடல் துறை அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டை கட்சியிலிருந்து நீக்கியமை சட்டப்படி சரியானது என – உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (06) தீர்ப்பளித்தமையினை அடுத்து, அன்றைய தினமே அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு உரிய தரப்பினருக்கு அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

ஹாபிஸ் நசீரை நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீக்குமாறு – நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு வெள்ளிக்கிழமையன்றே எழுத்து மூலம் அறிவித்து விட்டதாக, மு.காங்கிரஸின் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் – அவர் தெரிவு செய்யப்பட்ட கட்சி அல்லது சுயேற்சைக் குழுவில் உறுப்புரிமையை இழந்தால், அந்த நாளிலிருந்து ஒரு மாதத்தின் பின்னர் அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையும் காலியாகும் என, அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவேதான், முஸ்லிம் காங்கிரஸிருந்து – தான் நீக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி, உச்ச நீதிமன்றில் ஹாபிஸ் நசீர் அஹமட் வழக்குத் தொடர்ந்திருந்தார். ஆனால், முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அவர் நீக்கப்பட்டமை சட்டப்படி சரியானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: மு.காங்கிரஸிலிருந்து ஹாபிஸ் நசீர் நீக்கப்பட்டமை செல்லுபடியாகும்; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: எம்.பி பதவியும் பறிபோகிறது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்