இடைநிறுத்தப்பட்ட 98 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும்: வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உறுதி

🕔 October 4, 2023

– முனீரா அபூபக்கர் –

ல்வேறு அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு அண்மையில் நிறுத்தப்பட்டுள்ள 98,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார். அதற்கு 24,000 மில்லியன் ரூபா தேவைப்படும் எனவும் அவர் கூறினார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உத்தரவுக்கு அமைவாக நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த அரசாங்கங்கள் ஆரம்பித்த திட்டங்களை நிறைவேற்றாமல் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் புதிய திட்டங்களை ஆரம்பித்ததால் – அரைகுறையாக இருந்த 98,000 வீடுகள் தேசிய வீடமைப்பு அமைப்பில் சேர்க்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நிட்டம்புவ – ரன்பொகுனுகம வீட்டுத்திட்டத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நேற்று (03) இடம்பெற்ற நடமாடும் சேவையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மேற்கண்ட விடயத்தை கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான நிட்டம்புவ – ரன்பொகுனுகம வீடமைப்புத் திட்டம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக உலக குடியிருப்பு தினத்துடன் இணைந்து நடமாடும் சேவையை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த வீடமைப்புத் திட்டத்தில் வாழும் மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை எம்மிடம் முன்வைத்தனர். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ரன்பொகுனுகம வீடமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்ட போது, சரியான திட்டமிடல் இல்லை என்பதே எனது கருத்து.

இந்த வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக்கப்படும் போது, இங்குள்ள வீடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்ட போதிலும், கழிவுநீர் அமைப்பு, தொலைபேசி இணைப்புகள், குழாய்கள் அமைப்பு, வடிகால் அமைப்பு போன்ற வெளிப்புறத் தேவைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படவில்லை. அந்தக் காலத்தில் முக்கியமானதாக இருந்தது – முதலில் வீடு கட்டி குடியேற வேண்டும் என்பதுதான். ஆனால் அதிகாரசபை என்ற வகையில் நாம் இந்தப் பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது.

தற்போது நாடு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இப்போது நாம் படிப்படியாக ஒரு நல்ல திசையில் சென்று கொண்டிருக்கிறோம். 1½ ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் இதை பொறுப்பேற்றோம். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனம் போன்ற பல நிறுவனங்கள் உள்ளன.

எமது அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்களில் கடந்த வருடம் அதிகூடிய பொருளாதார வளர்ச்சியை எட்டிய நிறுவனமாக மாற்ற முடிந்தது. எமது நிறுவனம் சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்த்து இன்று எமது நிறுவனம் நிதி ரீதியாக ஸ்திரமான நிலையில் உள்ளது.

நாங்கள் சில முடிவுகளை எடுத்தோம். எனவே, இன்று கடன் மீள அறவிடுதலில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம். இந்த நிறுவனத்தை நாங்கள் பொறுப்பேற்ற போது, கடன் மீள அறவிடுவதன் மூலம் மாதாந்தம் 150 மில்லியன் ரூபாவையே பெற்றுக்கொண்டோம். ஆனால் இன்றைய நிலவரப்படி, கடனை மீள் அறவிடுவதன் மூலம் மாதாந்தம் 300 – 350 மில்லியன் ரூபாய் வரை பெறுகிறோம்.

எங்கள் நிறுவனத்திற்கு சம்பளம் கொடுக்க அரசு பணம் தருவதில்லை. சவால்களை முறியடித்து முன்னேறினால்தான் இந்த நிறுவனங்களை கட்டியெழுப்ப முடியும். இன்றைக்கு பல நிறுவனங்கள் நஷ்ட நிலையை அடைந்து – சில நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால் அந்த நிறுவனங்களில் நாங்கள் இல்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் போன்று – எமது அமைச்சுக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் இந்த நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் அரைவாசியளவில் கட்டப்பட்டு நிறுத்தப்பட்ட சுமார் 98,000 வீடுகள் நாடு முழுவதிலும் உள்ளன. இந்த வீடுகளின் பணிகளை நிறைவு செய்வதற்கு சுமார் 24,000 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது.

தேர்தல் வரும்போது ஐம்பதாயிரம், ஒரு லட்சம் ரூபா காசோலையை கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்தபின் அந்த வீடுகளின் எஞ்சிய பணிகளைச் செய்ய முடியாத நிலையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த நிறுவனத்தைப் பொறுப்பேற்றார். எந்த அரசாங்கம் தொடங்கினாலும் ஆளும், எதிர்க் கட்சி என்ற வேறுபாடு பார்க்காமல் நிறுத்தப்பட்ட வீடுகளின் மீதிப் பணிகளை முடிக்குமாறு அமைச்சர் எங்களை அறிவுறுத்தினார்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்