“வரலாற்றில் நீதவான் ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்”: நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் சுமந்திரன் கோபம்

🕔 September 29, 2023

லங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கவனம் எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் மொழிகள் மற்றும் சமூக அபிவிருத்தி பயிற்சி மத்திய நிலையத்தில் சிங்கள மொழி கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு மானிப்பாய் சுதுமலை பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றில் இன்று (29) காலை சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்படி விடயத்தை சுமநதிரன் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதல் முறையாக எங்களுடைய நாட்டின் சரித்திரத்தில் நீதிபதி ஒருவர் தன்னுடைய உயிர் பாதுகாப்புக்காக அதுவும் – தான் வழங்கிய ஒரு தீர்ப்பின் அடிப்படையில் எழுந்த அச்சுறுத்தலின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இன்றைய பத்திரிகைகள் சொல்லுகின்றன. இது நீதித்துறைக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற அதி உச்சமான ஓர் அச்சுறுத்தல்.

நாட்டிலே இருக்கின்ற சுயாதீனமான நிறுவனங்களை பாதுகாக்க வேண்டிய பாரிய கடைப்பாடு எங்கள் அனைவருக்கும் இருக்கின்றது.

அத்தகைய சுயாதீனமான நிறுவனங்களிலே பிரதானமானது நீதி துறையாக இருக்கின்றது, நீதித்துறையை பாதுகாக்கின்ற போது நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் செய்வதை நாங்கள் கண்டிக்க வேண்டும், தடுக்க வேண்டும். அதே வேளையிலே நீதித்துறைக்கு உள்ளேயே தவறுகள் இருந்தால் அதனை திருத்துகின்ற வகையிலே நாங்கள் செயல்பட வேண்டும்.

நீதித்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்ப்படுகின்ற போது, அச்சுறுத்தலை எதிர்கொள்வோர் மூன்று விதமாக அவர்கள் செயல்படலாம். ஒன்று அந்த அச்சுறுத்தலை கணக்கில் எடுக்காமல் தாங்கள் செய்ய வேண்டியதை செய்வது. இரண்டாவது அப்படியான அச்சுறுத்தல் வந்தால் அவர்கள் ராஜினாமா செய்து அதிலிருந்து விலகி ஓடுவது. மூன்றாவது நிலைப்பாடு நீதிபதிகள் அந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகி அதற்கு அடங்கி தங்களுடைய நடத்தையை அல்லது தீர்ப்பை மாற்றி மற்றவர்களுடைய கைப்பொம்மையாக இயங்குவது. அதுவும் தடுக்கப்பட வேண்டும்.

நீதித்துறையை பாதுகாப்பது என்றால் நீதிபதிகள் என்ன செய்தாலும் அவர்களை பாதுகாப்பதல்ல. நீதிபதிகள் சுயாதீனமாக செயல்படுவதை நாங்கள் பாதுகாப்பது,

என்ன நடந்தது?

குருந்தூர் மலை விவகாரம், தொடர்பான வழக்கினை ஆராய்ந்து வந்த, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா தனது, பதவி விலகல் கடிதத்தை, நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார். 

கடந்த 23ம் திகதி குறித்த கடிதத்தை அவர், நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து – தனக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதவான் பொறுப்புகளில் இருந்தும் விலக தீர்மானித்ததாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, குருந்தூர் மலை விவகாரத்தில், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது – நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு நீதவான் ரி.சரவணராஜா தீர்ப்பளித்திருந்தார். 

இந்தவிடயத்தில், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளைகளை மதித்து செயற்படவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில், முல்லைத்தீவு நீதவானின் தீர்ப்பு குறித்து விமர்சித்திருந்தார். 

இவ்வாறான சூழலில், முல்லைத்தீவு நீதவான் தமது பதவியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அவர் நாட்டை விட்டும் வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்பான செய்தி: முல்லைத்தீவு நீதவான் தொல்பொருள் கட்டளை சட்டத்தை மீறியுள்ளார் என, சரத் வீரசேகர எம்பி குற்றச்சாட்டு: நீதவானின் மனநலம் தொடர்பிலும் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டார்

Comments