பாலியல் பலாத்கார குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்க விடுதலை: நீதிமன்றுக்கு வெளியில் அவர் கூறியது என்ன?

🕔 September 28, 2023

லங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணத்திலக்க பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றமற்றவர் என நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது.

அவுஸ்ரேலியாவில், பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன் போதே இந்த தீர்ப்பை நிவ் சௌத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றம் வழங்கியது.

சாட்சி கோரல்கள் மற்றும் எழுத்துமூல சமர்ப்பனங்கள் கடந்த 4 நாட்களாக நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

ரி 20 உலகக் கோப்பைக்கான போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணியுடன் அவுஸ்திரேலியா சென்றிருந்த 32 வயதுடை தனுஷ்க, 2022 ஆம் ஆண்டும் நொவம்பர் மாதம் 29 வயதுடைய பெண் ஒருவரை சிட்னியில் சந்தித்துள்ளார்.

இதனையடுத்து தன்னை தனுஷ்க குணதிலக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குறித்த பெண் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டுக்கமைய தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக அவுஸ்ரேலிய அரச சட்டத்தரணி ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதன் அடிப்படையில் தனுஷ்க குணதிலக கடந்த நவம்பர் 06 ஆம் திகதி அதிகாலை சிட்னியில் கைதானார்.

ஆரம்பத்தில் தனுஷ்க மீது பாலியல் பலாத்காரம் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பின்னர் அவற்றில் பல வாபஸ் பெறப்பட்ட நிலையில், குறித்த பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் போது, அவரின் விருப்பத்துக்கு மாறாகவும் திருட்டுத்தனமாகவும் ஆணுறையை தனுஷ்க அகற்றினார் எனும் குற்றச்சாட்டு மட்டும் விசாரணைக்கு வந்தது.

இவ்விடயத்தில் புகாரளித்த பெண், தான் பாதுகாக்கப்பட்ட உடலுறவுக்கு மட்டுமே சம்மதம் தெரிவித்ததாகக் கூறினார்.தனுஷ்க ஆணுறையை கழற்றியதை தான் பார்க்கவில்லை என்றும், உடலுறவு முடிந்த சிறிது நேரத்திலேயே அதை தரையில் பார்த்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

தனுஷ்க குணதிலக தன்னை ‘பலவந்தமாக’ முத்தமிட்டதாகவும், தனக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் வகையில் அவர் கடுமையாக நடந்து கொண்டதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியிருந்தார்.

08 டெஸ்ட் போட்டிகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட கிறிக்கட் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய தனுஷ்க குணதிலக – கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கிறிக்கட் போட்டிகளிலிருந்த இடைநிறுத்தப்பட்டார்.

இந்த வழக்குத் தீர்ப்பு தொடர்பில் நீதிமன்றுக்கு வெளியில் பேசிய தனுஷ்க, தீர்ப்பு எல்லாவற்றையும் கூறுகிறது என்றும் தனது நற்பெயரை மீட்டெடுத்துள்ளதாகவும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்