‘பெற்றிகலோ கெம்பஸ்’ தொடர்பில் வீரகேசரியின் இனவாத முகம் : எதிர்ப்பை அடுத்து ‘வாலை’ச் சுருட்டியது

🕔 September 25, 2023

– மரைக்கார் –

வீரகேசரி பத்திரிகை மற்றும் அதன் ஏனைய வெளியீடுகள் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத முகத்தினை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றமைக்கு, மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் நேற்று (24) வீரகேசரி இணையத்தளம் வெளியிட்ட செய்தி மற்றுமொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது,

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹில்புல்லாஹ்வின் பெரும் முயற்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘பற்றிகலோ கெம்பஸ்’ (Batticaloa Campus) தொடர்பில் – வீரகேசரி செய்திகளை வெளியிடும் போது, அதனை ‘ஷரீஆ பல்கலைக்கழகம்’ எனக் குறிப்பிட்டு வருகின்றது.

அந்த வகையில் ‘மட்டு. ஷரிஆ பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்லூரி பொறுப்பு – பாதுகாப்பு சபை கூட்டத்தில் தீர்மானம்’ எனும் செய்தியொன்றை வீரகேசரி இணையத்தளம் நேற்று (24) வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த செய்தி தொடர்பில் சிலர் வீரகேசரியை தொடர்புகொண்டு, மட்டக்களப்பில் அமைந்துள்ளது ‘ஷரீஆ பல்கலைக்கழகம்’ அல்ல என்றும், அதற்கு ‘பெற்றிகலோ கெம்பஸ்’ என்கிற பெயர் உள்ளது எனவும் சுட்டிக்காட்டியதோடு, வீரகேசரியின் இனவாத செயற்பாட்டை கண்டித்திருந்தனர்.

இதனையடுத்து சங்கடத்துக்குள்ளான வீரகேசரி இணையத்தளம் – தமது செய்தியில் ‘ஷரீஆ’ எனும் சொல்லை இன்று (25) நீக்கியுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையை வருடங்களில் இனவாதிகள் மேற்கொண்டு வந்த கடுமையான நடவடிக்கைகளின் போது, ஹிஸ்புல்லாவினால் உருவாக்கப்பட்ட மேற்படி பல்கலைக்கழகத்தை, இஸ்லாமிய அடிப்படை வாதத்தை போதிப்பதற்கான பல்கலைக்கழகம் என்றும், அது ‘ஷரீஆ’வை (இஸ்லாமிய சட்டம்) போதிப்பதற்கான பல்கலைக்கழகம் எனவும் பிரசாரம் செய்தனர். மேலும் அந்தப் பல்கலைககழகத்தை அரசுடைமையாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் – நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்ட போது, மேற்படி பல்கலைக்கழகத்தை ராணுவத்தினர் கைப்பற்றி, அதனை கொரோனா நோயாளர்களை தங்க வைக்கும் இடமாகவும் பயன்படுத்தி வந்தனர்.

இருந்த போதிலும், தற்போதைய ஜனாதிபதியின் உத்தரவுக்கிணங்க அந்தப் பல்கலைக்கழகத்தை கடந்த 20ஆம் திகதி, முன்னாள் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவிடம் ராணுவம் கையளித்தது.

சஊதி அரேபிய தனவந்தர்களின் நிதிப் பங்களிப்பில் இந்தப் பல்கலைக்கழகம் சுமார் 1500 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான் ‘பற்றிகலோ கெம்பஸ்’ எனும் மேற்படி மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை, இனவாதிகள் குறிப்பிட்டு பிரசாரம் செய்த சொற்களைப் பயன்படுத்தி, வீரகேசரியும் தனது செய்திகளை எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: வீரகேசரியின் நக்குண்ணித்தனம்: ‘பீ’ துடைப்பதற்கும், முஸ்லிம் சமூகம் பயன்படுத்தக் கூடாத பத்திரிகை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்