குறைந்த வருமானம் பெறுவோர், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சீன உதவியில் 1996 வீடுகள்

🕔 September 24, 2023

– முனீரா அபூபக்கர் –

குறைந்த வருமானம் பெறுபவர்கள், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக சீன அரச உதவியுடன் கட்டப்படும் 1996 வீட்டு அலகுகள் குறித்த ஒப்பந்தம் – அடுத்த மாதம் கைச்சாத்திடப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீட்மைப்பு அமைச்சு தெரிவித்தது.

சீனாவின் பீஜிங்கில் அடுத்த மாதம் நடைபெறும் ‘Belt and Road Initiative’ (BRI) உச்சிமாநாட்டின் போது ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

1996 வீட்டு அலகுகளில் இந் நாட்டின் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 108 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த வீடுகள் பழதுறுவத்த பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி குறைந்த வருமானம் பெறுவோருக்கு 1888 வீடுகள் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வீடமைப்புத் திட்டத்துக்காக சீன அரசாங்கம் 552 மில்லியன் யுவான் நிதியுதவியை வழங்கவுள்ளது.

இங்கு இத்திட்டத்திற்காக செலவிடப்படும் வரிப்பணம், காணி சுவீகரிப்புக்கான செலவு, காணி அபிவிருத்திக்கான செலவு, வடிவமைப்பு வேலைக்கான செலவு மற்றும் அடிப்படை விலைப்பட்டியல் தயாரிப்பதற்கான செலவு, டெண்டர் பணிக்கான செலவு மற்றும் கழிவுநீர் வசதிகளின் செலவு என்பன இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பான பரிமாற்றக் கடிதத்தில் சீன மக்கள் குடியரசும் இலங்கை அரசும் கடந்த ஜனவரி 9ஆம் திகதி கைச்சாத்திட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் குறைந்த வசதிகள் கொண்ட குடியிருப்புகளில் வசிப்பவர்களின் குடியேற்றப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Comments