உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை ரத்துச் செய்யும் தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை நஷ்டம்: பஃப்ரல் தெரிவிப்பு

🕔 September 23, 2023

ள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்து செய்வதற்கு அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட சந்தர்ப்பமுள்ளதாக, ‘பஃப்ரல்’ அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி; “நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வேளையில் இது தொடர்பான தீர்மானம் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்றல்ல” என்றார்.

“இதுபோன்ற முடிவுகளை எடுப்பதால் அரசுக்கு ஏற்படும் இழப்புக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? தற்போது தேர்தல் நடைபெறவில்லை என்றாலும், உள்ளூராட்சி தேர்தல் ஒரு கட்டத்தில் நடத்தப்பட வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலுக்காக – தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே வாக்குச் சீட்டுகளை அச்சிடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் பொருட்டு பெரும் தொகையை செலவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொது நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சின் ஆலோசனைக் குழு, உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்ய கடந்த 20ஆம் திகதி ஏகமனதாக அனுமதிளளித்தது.

தேர்தல்கள் பிற்போடப்பட்டமையினால் வேட்புமனுக்களை சமர்ப்பித்தவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதை கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்