‘தங்கக் கடத்தல்’ அலி சப்ரி ரஹீமை, நாடாளுமன்ற குழுக்களில் இருந்து இடைநிறுத்த தீர்மானம்

🕔 September 22, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் – நாடாளுமன்றக் குழுக்கள் அனைத்திலும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் இருந்து இடைநிறுத்தம் செய்யும் தீர்மானத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (22) நாாளுமன்றத்தில் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான பிரேரணையை இன்று காலை நாடாளுமன்றில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சப்ரி அண்மைக்காலமாக சட்டவிரோதமான முறைகேடுகளில் ஈடுபட்ட போதிலும் நாடாளுமன்றக் குழுக்களை தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்துவது கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை தொடர்பில் சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதன்போது சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதனால், தற்போது நாடாளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் விசாரணையில் உள்ள அலி சப்ரி, மேற்படி விசாரணை முடியும் வரை நாடாளுமன்றக் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது என நாடாளுமன்றம் தீர்மானித்தது.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாச, “சட்டவிரோதமான முறையில் 74 மில்லியன் ரூபா பெறுமதியான 3.3 கிலோ கிராம் தங்கம், 42 மில்லியன் ரூபா பெறுமதியான 41 ஸ்மார்ட்போன்கள், ரூ. 4.2 மில்லியன், மிகைப்படுத்தப்பட்ட அபராதம் ரூ. 70 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கொண்டு அலி சப்ரிக்கு 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால் 80 மில்லியன் ரூபா பெறுமதியா தங்கத்தைக் கொண்டு வந்த பிரான்ஸ் நாட்டவர் ஒருவருக்கு 70 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

எனவே இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என, இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மே 23 அன்று அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகளுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்