ஒப்பாரிப் பொல்லடி: இல்லாத ஒன்றை இருப்பதாக கூறும் மு.கா தலைவரின் சகோதரர் ஹசீர்: கிழக்கு முஸ்லிம்களின் கலை வரலாற்றை திரிபுபடுத்தச் சதியா?

🕔 September 21, 2023

– மரைக்கார் –

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நினைவு தின நிகழ்வில் பொல்லடி அரங்கேற்றப்பட்டமை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் தொடர்பில், அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ரஊப் ஹசீர் தெரிவித்து வரும் விடயங்கள் கடுமையான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மேற்படி நிகழ்வை கடந்த 17ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் நடத்தியது. அதில் மு.கா. தலைவர் உள்ளிட்ட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், ஒருவரின் இறப்பின் நினைவாக நடத்திய நிகழ்வில் – பொல்லடியை அரங்கேற்றியமை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

‘பொல்லடி என்பது சந்தோசமான நிகழ்வுகளின் போது அரங்கேற்றப்படும் ஒரு கலையாகும். அதனை ஒரு நபரின் மரணத்தை நினைத்து நடத்தும் நிகழ்வில் எவ்வாறு அரங்கேற்றலாம்?’ என்பது விமர்சகர்களின் கேள்வியாகும்.

இந்தக் கேள்வி நியாயமானதாகும்.

ஆனால், இந்த விமர்சனத்தை ஜீரணித்துக் கொள்ள முடியாத மு.கா தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மூத்த சகோதரர் ரஊப் ஹசீர், குறித்த விமர்சனத்தை முன்வைத்தோரை – ‘முட்டாள்கள்’ என்று குறிப்பிட்டுள்ளதோடு, அஷ்ரப் நினைவு தின நிகழ்வில் தாம் அரங்கேற்றியது ‘ஒப்பாரி பொல்லடி’ என்றும், ஒரு துக்க நிகழ்வில் அரங்கேற்ற அது பொருத்தமானது என்றும் பகிரங்கமாக சமூக ஊடகத்தில் வாதிட்டு வருகின்றார்.

சாய்ந்தமருதில் நடைபெற்ற அஷ்ரப் நினைவு தின நிகழ்வை ஏற்பாடு செய்தவர் ரஊப் ஹசீர் என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் காங்கிரஸின் பிரதான நிகழ்வுகளுக்கான ‘பேனர்’கள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை தயாரித்து அச்சிடுவது, கூட்டங்களை ஏற்பாடு செய்வது மற்றும் மாநாடுகளை பொறுப்பெடுத்து நடத்துபவர் – ரஊப் ஹசீர் என்பதும், அதில் அவர் ‘சுளை’யாக உழைப்பவர் என்பதும் பரவலாக அறியப்பட்ட விடயமாகும்.

இந்த வகையில் சாய்ந்தமருதில் நடந்த அஷ்ரப் நினைவுதின நிகழ்வில் – பொல்லடியை மடத்தனமாக அரங்கேற்றிய ரஊப் ஹசீர், அதிலுள்ள முரண்பாட்டைச் சுட்டிக்காட்டடிய நபர்களை ‘கிழக்கு மாகாண முட்டாள்கள்’ என எழுதியிருப்பது பாரிய கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஊப் ஹசீரின் பேஸ்புக் பதிவு

முன்னர் ஒரு தடவையும் கிழக்கு மாகாண மக்களை ‘தேவடியாள்’ என குறிப்பிட்டு இவர் சமூக ஊடகத்தில் எழுதியிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

‘ஒப்பாரி பொல்லடி’ என்று ஒன்று உள்ளதா?

பொல்லடி என்பது கிழக்கு மாகாண முஸ்லிம்களிடத்திலுள்ள ஒரு வகை கலையாகும். பொல்லடியில் கிட்டத்தட்ட 18 வகை உள்ளன என்று கூறப்படுகிறது. இரண்டு, மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் வாழ்கையில் நடக்கும் சந்தோசமான தருணங்களில் பொல்லடி தவறாமல் அரங்கேறும்.

விழாக்களில் கலந்து கொள்ளும் பிரதம அதிதிகள் பொல்லடித்தே வரவேற்கப்படுவர். திருமணத்தின் போது பெண் வீட்டுக்கு – பொல்லடித்தே மாப்பிள்ளை அழைத்துச் செல்லப்படுவார். சுன்னத்துக் கல்யாண வீடுகளிலும் பொல்லடி இடம்பெறும்.

பொல்லடியின் போது – ‘பைத்’ மற்றும் பாட்டுக்களை அண்ணாவியார் (பொல்லடியைக் கற்றுக் கொடுப்பவர்) பாடுவார். குழுவினர் அண்ணாவியாருக்கு கோரஸ் அல்லது துணைப்பாட்டுப் பாடி பொல்லடிப்பர்.

பொல்லடிக்கென்று பாடல்கள் உள்ளன. அவை பொல்லடிப்பாடல்கள் என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இறக்காமம் பிரதேசத்தில் ஓட்டு உற்பத்தி தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டபோது, அது குறித்து அங்கு வாழ்ந்த புலவர் ஒருவர் பாடிய பாடல் மற்றும் இறக்காமத்துக்கு முதன்முதலாக பஸ் வந்தபோது பாடப்பட்ட பாடல்களை, அங்கு பொல்லடிப் பாடல்களாக பாடுவர்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள பழமையான முஸ்லிம் ஊர்களில் இறக்காமம் முக்கியமானதாகும். அங்கு பொல்லடியில் பாண்டித்தியம் பெற்ற பலர் இன்னும் உள்ளனர்.

ரஊப் ஹசீர் கூறுவது போல் ‘ஒப்பாரிப் பொல்லடி’ என்று எதுவும் கிடையாது. ஒப்பாரி என்பது மரண வீட்டில், அழுகையின் ஊடு – இறந்தவரின் சிறப்பு மற்றும் பெருமைகளைக் கூறி பாடப்படுவதாகும். கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்களில் ‘ஒப்பாரிப் பாடல்கள்’ உள்ளன. ஆனால், பொல்லடியின் போது ஒப்பாரிப்பாட்டு பாடப்படுவதில்லை. காரணம் பொல்லடி என்பதே மகிழ்ச்சிகரமானதொரு கலையாகும்.

பொல்லடியை ‘களி கம்பாட்டம்’ என்றும் கூறுவதுண்டு. ‘களி’ என்பதற்கு மகிழ்ச்சி என்கிற அர்த்தமும் உண்டு. எனவே களி கம்பாட்டம் என்றால் – ‘மகிழ்ச்சிகரமான கம்பாட்டம்’ என்று பொருட்படும்.

எனவே, ஒருவரின் மரண நிகழ்வை நினைத்து நடத்தும் நிகழ்வில் – பொல்லடியை அரங்கேற்றியமை பிழை என்று சொன்னவர்களிடம்; ‘ஒப்பாரிப் பொல்லடி எனும் வகையை அறியாத முட்டாள்கள் கிழக்கு மாகாணத்தில் இருப்பது வருந்தத் தக்கது’ என, ஹசீர் எழுதி, தனது பிரதேசவாதத்தை மீண்டும் கக்கியுள்ளார்.

மு.கா தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் ஹசீர் போன்றோர் கிழக்கு மாகாணத்துக்கு அரசியல் பிழைப்புத் தேடி வந்தவர்கள். இவர்கள் கிழக்கு மக்களின் வாக்குப் பிச்சையில்தான் இன்னும் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் கிழக்கு மக்களை இழிவாக பேசுவதும், எழுதுவதும் ஹசீருக்கு நல்லதல்ல.

கொல்லன் தெருவில் ஊசி விற்கும் ஹசீர்

‘கொல்லன் தெருவில் ஊசி விற்பது போல்’, கிழக்கு முஸ்லிம்களுக்கு பொல்லடி குறித்து ஹசீர் பாடம் எடுக்க முயற்சிப்பது கோமாளித்தமனமான செயற்பாடாகும். ஒருவரின் மரணத்தை நினைவுகூரும் நிகழ்வில் பொல்லடி அரங்கேற்றுவது தவறு என, அதுகுறித்து அறிந்தவர்கள் கூறினால், அந்தத் தவறை ஏற்றுக் கொள்வதும், அதனை இதற்குப் பின்னர் செய்ய மாட்டோம் எனச் சொல்வதும்தான் பெருமக்கள் பண்பாகும்.

இதை விட்டுவிட்டு, பிழையைச் சுட்டிக்காட்டிய மக்களின் பிரதேசத்தைக் குறிப்பிட்டு, அவர்களை ‘முட்டாள்கள்’ என எழுதுவது ஹசீருக்கு நல்லதல்ல.

கிழக்கு முஸ்லிம்களை ‘சொறியும்’ இந்த விளையாட்டை ஹசீர் தொடர்ந்தும் செய்தால், அவருக்கு ‘கூந்தல் கட்டி’ அடித்து, ‘குறுக்குத் தெளிய வைக்கும்’ வேலையை கிழக்கு முஸ்லிம்கள் வெகு விரைவில் செய்து காட்டுவர்.

முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய அஷ்ரப் நினைவு தின நிகழ்வில் அரங்கேறிய பொல்லடி

பொல்லடி பற்றி தெரிந்து கொள்வதற்கான வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்