கஜேந்திரன் எம்.பி மீது நடத்தப்பட்ட ‘வெட்கக் கேடான’ தாக்குதலுக்கு சுமந்திரன் கண்டனம்: நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை

🕔 September 18, 2023

மிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை தாக்கிய குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

உண்ணா விரதமிருந்து மரணித்த – புலிகள் இயக்க உறுப்பினர் திலீபனின் நினைவு தினைத்தையொட்டி, அவரின் சிலையுடன் வாகனத்தில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது, நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) திருகோணமலையில் வைத்து சிலர் தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் – பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட வெட்கக் கேடான தாக்குதலை கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் வீடியோ காட்சிகளில் சந்தேக நபர்களை அடையாளம் காண முடியும் என்று குறிப்பிட்டுள்ள சுமந்திரன், இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரையும் குறிப்பட்டுள்ள அவர், “இப்போது உங்கள் நல்லிணக்க வாய்வீச்சை செயற்படுத்துங்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீது – பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதை அடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கண்டனங்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினரை எல்ரிரிஈ தலைவர் எனக் கூறி, பெண் ஒருவர் உட்பட பலர் தாக்குவதை, வெளியாகியுள்ள வீடியோகளில் காண முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்