மு.காங்கிரஸ் நிகழ்வுக்கு சாய்ந்தமருதில் வலுக்கும் எதிர்ப்பு: “ஏமாற்றிய ஹக்கீமுக்கு எமதூரில் இடமில்லை” என மக்கள் கொந்தளிப்பு

🕔 September 13, 2023

– அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் பிரதான நிகழ்வை, அந்தக் கட்சியினர் – சாய்ந்தமருது பிரதேசத்தில் நடத்துவதற்கு ஒழுங்குசெய்துள்ள நிலையில், அப்பிரதேச மக்கள் அதற்கு பாரிய எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

சாய்ந்தமருது பிரதேசத்துக்கான உள்ளூராட்சி சபையொன்றை பெற்றுத் தருவதாக, முஸ்லிம் காங்கிரஸின் தற்போதை தலைவர் ரஊப் ஹக்கீம் – அமைச்சராக இருந்த காலப்பகுதியில் வாக்குறுதி வழங்கி விட்டு, பின்னர் ஏமாற்றியமை காரணமாக, அவருடன் அப்பிரதேச மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

மேலும், மு.கா. தலைவரால் இவ்வாறு ஏமாற்றப்பட்டமையின் காரணமாக, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைமையில் அப் பிரதேச மக்களில் மிக அதிகமானோர், முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை எடுத்திருந்தனர்.

இதனையடுத்து சாய்ந்தமருதுக்கு ஒரு தடவை மு.காங்கிரஸ் தலைவர் வருவதற்கான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது, அப்பிரதேச மக்கள் தும்புத்தடி, செருப்பு போன்றவற்றுடன் வீதிகளில் இறங்கி, ரஊப் ஹக்கீமுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

இந்தப் பின்னணியில், சாய்ந்தமருதைச் சேர்ந்தவரும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கல்முனை மாநகர சபையின் மேயராக கடந்த காலத்தில் பதவி வகித்து, பின்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகியவருமான சிராஸ் மீராசாகிப் என்பவரை, மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்ட ரஊப் ஹக்கீம், அவரைக் கொண்டு – அஷ்ரப் நினைவு தினத்தை சாய்ந்தமருதில் நடத்துவதற்கு ஒழுங்கு செய்துள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே மு.காங்கிரஸினர் சாய்ந்தமருதில் நடத்துவதற்குத் தீர்மானித்திருக்கும் மேற்படி அஷ்ரப் நினைவு தின நிகழ்வுக்கு சாய்ந்தமருது மக்கள் தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிகழ்வு மூலம், தம்மை ஏமாற்றிய மு.காங்கிஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் – சாய்ந்தமருதில் கால்பதிக்க இடமளிக்க கூடாது என, சமூக ஊடகங்களில் சாய்ந்தமருது மக்கள் சார்பில் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

இம்மாதம் 16ஆம் திகதி சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் மேற்படி நிகழ்வை மு.காங்கிரஸ் கட்சியினர் ஒழுங்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்