நீதித்துறை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் தொடர்பில் சபாநாயகரிடம் சட்டத்தரணிகள் சங்க தலைவர் கவலை

🕔 September 12, 2023

நீதித்துறை தொடர்பாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு உள்ளேயும் வெளியேயும் வெளியிடும் கருத்துக்களால் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக சட்டத்தரணிகள் சங்கம் அடையாளம் கண்டுள்ளது என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரட்ண வருத்தம் தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன உள்ளிட்ட உறுப்பினர்கள் குழு நேற்று (12) நாடாமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்த போது, இதனை அவர் கூறினார்.

நீதிமன்றங்கள் மற்றும் கடந்த காலங்களிலும் தற்போதும் பணியாற்றும் நீதிபதிகளின் பெயர்களை குறிப்பிட்டும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இவ்விடயம் தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்துமாறு கோரிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சபாநாயகரிடம் எழுத்துமூல கோரிக்கையையும் கையளித்தார்.

நீதிபதிகள் உட்பட நீதித்துறையின் கெளரவத்தை பாதுகாக்க எப்போதும் துணைநிற்பேன் என இதன்போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உறுதியளித்தார். எனவே, மேலும் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை ஈர்க்க எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித் தலைவர் – சட்டத்தரணி நலிந்த இந்திரதிஸ்ஸ, செயலாளர் – சட்டத்தரணி இசுரு பாலபடபேடி, பொருளாளர் – சட்டத்தரணி சமத் ஜயசேகர, உதவிச் செயலாளர் – சட்டத்தரணி மெஹ்ரான் கரீம் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்