நாமலுக்காக விடுவிக்கப்பட்டிருந்த விமானப் பணிப்பெண் சிக்கலில்

🕔 January 27, 2016
Namal - 123முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், அவருடைய புதல்வரான நாமல் ராஜபக்ஷவின் தனிப்பட்ட விவகாரங்களுக்கான பணியாளராக, ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த விமானப் பணிப்பெண், தற்போது ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்துக்கு 4.2 மில்லியன் ரூபாவினை செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக கடமையாற்றிய நித்யா சேனநாயக்க சமரநாயக்க எனும்  மேற்படி பெண், நாமல் ராஜபக்ஷவின் கோரிக்கையின் பேரில், அவரின் தனிப்பட்ட விவகாரங்களுக்கான பணியாளராகக் கடமையாற்றும் பொருட்டு, விமானப் பணிப்பெண் சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.

குறித்த பெண்ணை, அவரின் சேவையிலிருந்து விடுவிப்பதற்கான உத்தரவினை, அப்போது ஜனாதிபதியின்  செயலாளராகக் கடமையாற்றிய லலித் வீரதுங்க வழங்கினார்.

நாமல் ராஜபக்ஷவுக்காகப் பணியாற்றிய காலத்தில் மேற்படி பெண்ணுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தினால் மாதாந்தம் சுமார் 158,000 ரூபாய் செலுத்தப்பட்டு வந்தது.

இதேவேளை, அவர் தங்கியிருந்த அறைக்கான வாடகையினையும் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனமே செலுத்தியுள்ளது.

இவ்வாறு மொத்தமாக மேற்படி பணிப் பெண்ணுக்கு 4.2 மில்லியன் ரூபாவினை ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் செலுத்தியிருந்தது.

அந்தப் பணத்தினையே, தற்போது அவர் ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்துக்கு மீளளிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை,  தற்போது அந்தப் பெண், ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தில் தொழிற்சங்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்