நீதவானின் நடத்தை பாரபட்சமாக இருக்கிறதாம்: சஷ வீரவன்சவின் வழக்கை வேறு நீதிமன்றுக்கு மாற்றுமாறு உத்தரவு

🕔 September 11, 2023

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச எனப்படும் உதயந்தி ரணசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இருந்து புதுக்கடையிலுள்ள ஏதாவதொரு நீதவான் நீதிமன்றுக்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (11) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட இடமாற்ற விண்ணப்பத்தில், சசி வீரவன்ச, பிரதான நீதவானின் நடத்தை பாரபட்சமாக இருப்பதாகக் குறிப்பிட்டு, கொழும்பு பிரதான நீதவானிடமிருந்து வழக்கை வேறு எந்த நீதவானுக்கும் மாற்ற உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.

இரண்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சஷி வீரவன்சவுக்கு எதிராக – கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

சசி வீரவன்ச சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லட்டுவாஹெட்டியும், சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸும் ஆஜராகியிருந்தனர்.

கடந்த ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி, முதலாவது வழக்கில் சசி வீரவன்ச குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் 01 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

இரண்டு கடவுச் சீட்டுக்களை வைத்திருந்தமை மற்றும் ராஜதந்திர கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்தமை ஆகிய குற்றங்களுக்காகவே தீர்ப்பு வழங்கப்பட்டது.

இருந்த போதிலும், நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ததன் பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்