சேனல் 4 தொடர்பில், பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் விசாரணை
அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் (The British Electronic Media Regulatory Office) ‘சேனல் 4 காணொளி’ தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது.
ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஆவணப்படத்தை சேனல் 4 சமீபத்தில் வெளியிட்ட நிலையில், அதில் சுரேஷ் சாலே மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதற்கு முன்னர், தான் ஆதாரங்களுடன் சரியான பதில்களை வழங்கியிருந்த போதிலும், சேனல் 4 தன்னை இழிவுபடுத்தும் வகையில் இந்த காணொளியை வேண்டுமென்றே ஒளிபரப்பியுள்ளதாக பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகத்துக்கு சுரேஷ் சாலே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த ஆவணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் தெரிவித்துள்ளதாக சுரேஷ் சாலேயின் சட்டத்தரணி பசன் வீரசிங்க தெரிவிதுள்ளார்.
அந்தக் ஆவவணப்படத்தை வெளியிடுவதற்கு முன்னர், ஓகஸ்ட் 7ஆம் திகதி குற்றச்சாட்டுகள் குறித்து சுரேஷ் சாலேயிடம் சனல் 4 வினவியதாக பசன் வீரசிங்க கூறியதாகவும் அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது.
அனைத்து குற்றச்சாட்டுக்களையும் தான் மறுப்பதாகவும், கூறப்படும் காலப்பகுதியில் தான் இலங்கையில் கூட இருக்கவில்லை என்றும் சுரேஷ் சாலே மறுநாள் சேனல் 4க்கு எழுத்துமூலம் தெரிவித்ததாகவும் பசன் வீரசிங்க மேலும் கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதற்கு ஈஸ்டர் தாக்குதலை நடத்தியதாக அந்த வீடியோவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.