சஹ்ரான் குழுவினருக்கும், அரச புலனாய்வு தலைவருக்கும் இடையில் நடந்த சந்திப்பில் நானும் கலந்து கொண்டேன்: சேனல் 4 தொலைக்காட்சிக்கு ஆசாத் மௌலானா பேட்டி

🕔 September 5, 2023
ஆசாத் மௌலானா

ஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் 2019 ஆம் ஆண்டு நடைபெறுவதற்கு முன்னர், அந்தத் தாக்குதலை நடத்தியோரை இலங்கை ராணுவ உளவுத்துறை சந்தித்ததாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஆசாத் மௌலானா, பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சேனல் 4 தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில், சேனல் 4 தொலைக்காட்சி நாளை ஒளிபரப்பவுள்ள ஆவணம் ஒன்றின் முன்னோட்டத்தினை இன்று (05)வெளியிட்டுள்ளது.

அதில், நேர்காணல் வழங்கியுள்ள ஆசாத் மௌலானா; தாக்குதல்தாரிகளை உளவுத்துறையினர் சந்தித்த நிகழ்வில் தானும் கலந்து கொண்டதாகவும், அந்த சந்திப்பு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகவும் கூறியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சாலே ஆகியோருக்கு இடையில் அந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் ஆசாத் மௌலானா குற்றஞ்சாட்டியுள்ளார்.

“அந்த சந்திப்பின் போது வெள்ளை வேன் ஒன்றில் 06 பேர் வந்தார்கள். அவர்களுக்கு சுரேஷ் சாலேயை நான் அறிமுகப்படுத்தி வைத்தேன்” எனக் கூறியுள்ள ஆசாத் மௌலானா, அந்த சந்திப்பின் போது – வெளியில் இருக்குமாறு தன்னிடம் கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் பாதுகாப்பற்ற ஒரு நிலைவரம் உருவாக வேண்டிய தேவை ராஜபக்ஷவினருக்கு உள்ளது. அப்போதுதான் கோட்டாபய ஜனாதிபதியாக முடியும் என்று, அந்த சந்திப்பு முடிந்த பின்னர் சுரேஷ் சாலே என்னிடம் கூறினார்” என, அந்த முன்னோட்டத்தில் ஆசாத் மொலானா தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதல் குற்றவாளிகள் யார்? அதனை நடத்தியவர்கள் யார்? அதனை ஏற்பாடு செய்தவரகள் யார்? என்கிற உண்மைகள் தனக்குத் தெரியும் என்றும் ஆசாத் மௌலானா கூறியுள்ளார்.

தற்போது வெளிநாடுகளில் புகலிடம் கோரியிருக்கும் ஆசாத் மௌலானா, ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற தூதரக அதிகாரிகளுடன் ,ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த ஒன்பது தற்கொலை குண்டுதாரிகள் 2019 ஏப்ரல் 21 அன்று, மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் பல சொகுசு ஹோட்டல்களில் தொடர்ச்சியான பேரழிவு தரும் குண்டுவெடிப்புகளை நடத்தினர்.

இதில் 270 பேர் கொல்லப்பட்டனர். 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெறுவதற்கு, ஈஸ்டர் தாக்குதலை ராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அனுமதித்ததாக ஆசாத் மௌலானா குற்றம் சாட்டியுள்ளார்.

இதேவேளை, ஆசாத் மௌலானா புகலிடம் பெறுவதற்காக இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றார் என, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறியுள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டை சுரேஷ் சாலே சேனல் 4 தொலைக்காட்சிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மறுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்