பெண்ணின் வயிற்றிலிருந்து 08 கிலோ கல்; அறுவை சிகிச்சை மூலம் மீட்பு (படங்கள் இணைப்பு)
🕔 January 26, 2016
– க. கிஷாந்தன் –
பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து சுமார் 08 கிலோகிராம் எடையுடைய கல் ஒன்று, அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்டுள்ளது.
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் இன்று செவ்வாய்கிழமை சுமார் 04 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போதே, இந்தக் கல் மீட்கப்பட்டுள்ளது.
அக்கரப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
வயிற்று வலி என நீண்ட காலமாக அவதியுற்று வந்த மேற்படி பெண், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் சிகிச்சைக்கென சென்றிருந்தார்.
இவரை பரிசோதித்த வைத்தியர்கள், வயிற்றில் கட்டி ஒன்று இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த பெண்ணுக்கு, ஒளி கதிர் வீச்சு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே சம்பந்தப்பட்ட பெண்ணின் வயிற்றில் பாரிய கல் ஒன்று இருப்பதாக கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர்கள், இந்தப் பெண்ணுக்கு நான்கு மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகத் தெரியவருகிறது.
இதன்போதே, சுமார் 08 கிலோ எடையுடைய கல் ஒன்று, பெண்ணின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்டது.
கிளங்கன் வைத்தியசாலை வரலாற்றில் இவ்வாறான அறுவை சிகிச்சையின் மூலம், நபரொருவரின் வயிற்றிலிருந்து இவ்வாறான பாரிய கல் ஒன்று எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, குறித்த பெண் நலமாக இருப்பதாகவும், சிகிச்சை பாரிய வெற்றியை தந்ததாகவும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர் சி.யூ. குமாரசிறி தெரிவித்தார்.