இலங்கையில் எச்ஐவி தொற்றாளர்கள் தொகை இவ்வருடம் அதிகரிப்பு: காரணமும் வெளியிடப்பட்டுள்ளது

🕔 August 29, 2023

லங்கையில் 181 எச்ஐவி தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இது 2023 ஆம் ஆண்டின் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஒன்பது சதவீத அதிகரிப்பை காட்டுவதாக கூறப்படுகிறது. அந்தக் காலப்பகுதியில்165 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இரண்டாவது காலாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலானதாகும். இது 130 தொற்றாளர்கள் பதிவாகிய 2022 இன் இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது 39 சதவீத அதிகரிப்பைக் காட்டுகிறது.

இரண்டாவது காலாண்டில் அடையாளம் காணப்பட்டவர்களில், 26 ஆண்களும் மூன்று பெண்களும் 15-24 வயதுக்கு உட்பட்டவர்களாவர். ஏனையோர் 25 வயதுக்கு மேற்பட்ட நபர்களாவர்.

2023 இல் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் ஆண் மற்றும் பெண் விகிதம் 8.1:1 ஆக உள்ளது.

மேலும், இரண்டாவது காலாண்டில் எச்ஐவி/எய்ட்ஸ் தொடர்பான 13 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, இலங்கையில் உத்தியோகபூர்வமாக திருநங்கைகள் மத்தியில் 10 பேர் எச்.ஐ.வி தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் 3,968 ஆண்களும் 1,379 பெண்களும் எச்.ஐ.வி தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வருடம் மொத்தமாக 346 எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுவதாகவும் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதங்களில் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

சோதனை திறன் விரிவாக்கம், பொது மக்களிடையே பாலியல் கல்வி பற்றிய அறிவு இல்லாமை, ஆபத்தான பாலியல் நடத்தைகள் மற்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை உள்ளிட்ட பல காரணிகள் இந்த அதிகரிப்புக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

“தனிநபர்கள் எச்.ஐ.வி.யுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருப்பதும், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதும் முக்கியம். தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் – விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், எச்ஐவி பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான வளங்களை வழங்குவதற்கும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்