ராஜகுமாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உப பரிசோதகருக்கு விளக்க மறியல்

🕔 August 29, 2023

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த – வீட்டுப் பணிப்பெண் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில், வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உப பரிசோதகர் ஒருவரை – செப்டம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

பதுளையைச் சேர்ந்த 41 வயதுடைய ராஜகுமாரி, தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் சுதர்மா நெத்திகுமார என்பவரின் வீட்டில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், அவர் அங்கு நகைகளை திருடியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த மே 11ஆம் திகதி கைது செய்யப்பட்டார்..

இதனையடுத்து வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்தபோது அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் ராஜகுமாரியின் மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக, அவரின் கணவர் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.

ராஜகுமாரியின் மரணம் தொடர்பான வழக்கு கடந்த வாரம் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் எடுக்கப்பட்டது. இதன்போது அவர் கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

இதனையடுத்தே வெலிக்கடை பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்