அருகம்பே அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படும்: அங்கு சென்ற ஜனாதிபதி தெரிவிப்பு
🕔 August 25, 2023
அருகம்பே சுற்றுலா வலயத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய துறைகளை அடையாளம் கண்டு, முறையான திட்டத்தின் ஊடாக அந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, பிரபலமான நீர் சறுக்கு போன்ற விளையாட்டுக்களை அருகம்பே கடற்பிரதேசத்தில், ஊக்குவிப்பதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பு குறித்து சுட்டிக்காட்டினார்.
அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் இன்று (25) காலை நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்கான இக்கலந்துரையாடலில் அரச அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத்துறையில் பணியாற்றுவோர் கலந்துகொண்டனர்.
2035 ஆம் ஆண்டளவில் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% சுற்றுலாத்துறையின் மூலம் ஈட்டப்படும் என சர்வதேச அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும், சுற்றுலாத் துறையின் வருமானத்தின் ஊடாக இலங்கையின் நிதிப் பிரச்சினைகளுக்கு நேரடி தீர்வு பெற முடியும் என்றும் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையை இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும், அடுத்த 10 வருடங்களுக்குள் அதனை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (25) முற்பகல் அம்பாறை மாவட்டத்தின் அருகம்பே மற்றும் பீனட்பாம் கடற்கரைகளையும் பார்வையிட்டார்.
அந்த சுற்றுலாப் பிரதேசங்களின் குறைபாடுகளை ஆராய்ந்த பின்னர், அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடினார். அதன்பின், அப்பகுதியைச் சேர்ந்த வணிகர்களுடன் கலந்துரையாடி, சுற்றுலாத்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
மீன்பிடி இடங்களை மாற்றுமாறு ஆலோசனை
அருகம்பே கடற்கரைப் பிரதேசத்தை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்கையில் அங்குள்ள மீன்பிடி இடங்களை , தேவையான வசதிகளுடன் வேறு பகுதிகளுக்கு மாற்றுவது தொடர்பான யோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் டப்ளியூ.டி வீரசிங்க – ஜனாதிபதியிடம் முன்வைத்தார். அது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி , இப்பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இங்கு சுற்றுலாத் தொழிலில் ஈடுபடுவோருக்கு வியாபார ஸ்தலங்களுக்கான நிரந்தர அனுமதிப்பத்திரம் இன்மையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் இதற்குத் தீர்வுகளை வழங்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டார்.
வர்த்தக ஸ்தலங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினை குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
அருகம்பே பிரதேசத்தின் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண – உத்தேச கெடஓயா குடிநீர் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைய இன்னும் சில வருடங்கள் செல்லும் என்பதால், கடற்படையின் உதவியுடன் தற்போதுள்ள சிறிய நீர் மூலங்களுக்கு மீள்சுழற்சி செய்யும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவுவது குறித்து ஆராயுமாறும் அதிகாரிகளை ஜனாதிபதி பணித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.ஏம். அதாஉல்லா, எஸ்.எம்.எம்.முஷர்ரப், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் இங்கு உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)