போலி ஆவணங்கள் தயாரித்த கிராம சேவை உத்தியோகத்தர் கைது

போலி ஆவணங்களை தயாரித்ததாக கூறப்படும் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவரை கண்டி பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கண்டியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் சுமார் 30 மாணவிகளை சேர்ப்பதற்காக, அவர் இந்த போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தெய்யன்னவெல கிராம சேவையாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தராவார்.
அவர் – கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின் பெயர் மற்றும் உத்தியோகபூர்வ பதவி மற்றும் அமைச்சின் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி 29 மாணவர்களை கண்டியில் உள்ள பெண்கள் பாடசாலையொன்றில் சேர்ப்பதற்காக, போலியான ஆவணங்களை தயாரித்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கண்டி – தர்மசோக மாவத்தையை சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.