17 வருடங்களுக்குப் பின்னர், நாடு திரும்பிய தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா கைது

🕔 August 22, 2023

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா, 17 வருடங்களாக நாடு கடந்து வாழ்ந்த பின்னர் – தாயகம் திரும்பிய நிலையில் – அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரிலிருந்து தனியார் விமானம் ஒன்றினூடாக – இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு இவர் தாய்லாந்து திரும்பியிருந்தார்.

இதனையடுத்து அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பல முக்கிய குற்றச்சாட்டுகளின் பேரில் – அவர் கைது செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றுக்கு பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில் ‘தாய்லாந்தின் தந்தையே மீண்டும் வருக’ என தக்சின் ஷினவத்ராவின் மகள் பேடோங்டார்ன் ஷினாவத்ரா தனது இன்ஸ்டாகிராமில் குடும்பத்தின் புகைப்படத்திற்கு கீழே பதிவிட்டுள்ளாதோடு, ‘அவர் சட்ட செயல்முறைக்குள் நுழைந்துவிட்டார்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தக்சின் ஷினவத்ரா பாங்கொக் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதேவேளை அவர் மொத்தம் எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிப்பார் என, உச்ச நீதிமன்றம் அறிக்கை விடுத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2001ஆம் ஆண்டு தக்சின் அதிகாரத்திற்கு வந்தார். 2006ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் அவர் உரையாற்றுவதற்காக நியூயோர்க்கில் இருந்தபோது, தாய்லாந்தின் அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்