உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம்; சாதனைகளைக் குவித்த தமிழ்ப் பெண்: ஓய்வின் பின்னர் என்ன செய்கிறார்?

🕔 August 17, 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) –

லகில் உயரமான வலைப்பந்தாட்ட வீரர் தர்ஜினி சிவலிங்கம், இலங்கை தேசிய வலைப்பந்து அணியிலிருந்து ஓய்வுபெறுவதை அறிவித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் ஃபால்கன்ஸ் அணிக்காக தொடர்ந்தும் விளையாடவுள்ளதாக தெரிவிக்கின்றார்.

இலங்கைக்காக அதிக வலைப்பந்தாட்டப் போட்டிகளில் கலந்துகொண்டவர் எனும் புகழுக்குரிய தர்ஜினி, இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியின் தலைவர் பொறுப்பினையும் 2012ஆம் ஆண்டு வகித்திருந்தார்.

இவர் தென்னாபிரிக்காவில் இம்முறை நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் – இலங்கை சார்பாக விளையாடிய பின்னர், கடந்த 07ஆம் தேதி தனது ஒய்வை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

‘இலங்கை அணியிலிருந்து ஓய்வுபெறுவதை நான் உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறேன். இருப்பினும் எனது வலைப்பந்தாட்ட வாழ்க்கை வெளிநாடுகளில் தொடரும். கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆயினும்கூட, நான் ஓய்வுபெற முடிவு செய்தமைக்கு இது மிகவும் பொருத்தமான நேரம் என நினைக்கிறேன்’ என, தனது ஓய்வு குறித்த அறிக்கையில் தர்ஜினி தெரிவித்துள்ளார்.

உலகின் மிகச் சிறந்த ‘கோல் ஷுட்டர்

இலங்கை தேசிய வலைப்பந்து அணியின் பிரதான கோல் போடும் (Goal Shooter) வீரரான இவர், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில், ‘உலகில் மிகச் சிறந்த கோல் போடும் (Goal Shooter) வீரர்’ எனும் சிறப்பை பெற்றார்.

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் எனும் ஊரிலுள்ள தமிழ் குடும்பமொன்றிலிருந்து கொழும்பு வந்து, இலங்கையின் வலைப்பந்தாட்ட தேசிய அணிக்காக சுமார் 20 ஆண்டுகள் இவர் விளையாடியுள்ளார். மேலும், இலங்கை அணி பெற்றுக்கொண்ட வெற்றிகளுக்கு பிரதானமானவராவும் பல தடவை இருந்துள்ளார்.

தர்ஜினி – கலைத்துறைப் பட்டதாரி. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கையின் தேசிய வலைப்பந்தாட்ட அணியில் இணையும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக அவர் கூறுகின்றார்.

தனது பாடசாலை மற்றும் பல்கலைக்கழக அணிகளிலும் தர்ஷினி விளையாடியுள்ளார்.

தற்போது அவுஸ்ரேலியாவில் உள்ள அவரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது,

இலங்கை அணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள போதும், தான் வெளிநாட்டு கழகங்களில் இணைந்து விளையாடவுள்ளதாக தர்ஜினி கூறினார். அந்தவகையில் ஆஸ்திரேலியாவின் ஃபால்கன்ஸ் (City West Falcons Netball Club) கழகத்துக்காக விளையாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 2017ஆம் ஆண்டிலிருந்து ஃபால்கன்ஸ் அணிக்காக இவர் விளையாடுகின்றார்.

“இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவே ஓய்வுபெற்றேன்”

“இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்பதற்காகவே, தேசிய அணியிலிருந்து ஓய்வு பெற்றேன்” என, பிபிசி தமிழிடம் தர்ஜினி சிவலிங்கம் குறிப்பிட்டார். 1979ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 44 வயதாகிறது.

2.06 மீட்டர் உயரமுள்ள தர்ஷினி சிவலிங்கம், உலகிலுள்ள வலைப்பந்தாட்ட வீரர்களில் மிகவும் உயரமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் மிகவும் உயரமாக இருப்பது வலைப்பந்து விளையாட்டுக்கு எவ்வளவு சாதகமானதோ, அதேபோன்று அந்த உயரம் பல சந்தர்ப்பங்களில் பிரச்சினையாகி விடுவதாகவும் அவர் கூறுகின்றார். எடுத்துக்காட்டாக, பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பயணிப்பதற்கு இந்த உயரம் பிரச்சனையாக உள்ளது என்கிறார்.

இவர் இலங்கை வலைப்பந்தாட்ட தேசிய அணியில் இடம்பெற்றிருந்த காலப்பகுதியில், வங்கியொன்றிலும் பணியாற்றி வந்தார். 2004ஆம் ஆண்டு வங்கிப் பணியாளராக இணைந்த தர்ஜினி சிவலிங்கம், 2018ஆம் ஆண்டு அந்தப் பணியை ராஜினாமா செய்ததாக கூறினார்.

“செலவு அதிகரம்; அனுசரணையாளர்கள் உதவ வேண்டும்”

”யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்து – அங்கு தங்கி, எனது தனிப்பட்ட தேவைகளையும், ஒரு வலைப்பந்தாட்ட வீரர் எனும் வகையில் எனக்கு அவசியமானவற்றினையும் நிறைவேற்றுவதற்கு அதிக பணத் தேவை ஏற்பட்டது. அதற்கு வங்கித் தொழிலில் கிடைத்த சம்பளம் ஓரளவு உதவியாக இருந்தது. ஆனாலும், அந்த வருமானத்தை விடவும் எனக்கான செலவு அதிகமாக இருந்தது” என்கிறார்.

தர்ஜினி அதிக உயரமுடையவர் என்பதால் அவரின் கால் அளவுக்கான சப்பாத்து (காலணி) மற்றும் ஆடைகள் போன்றவற்றினை அதிக சிரமப்பட்டும், அதிக செலவு செய்தும் பெற்றுக் கொள்ள வேண்டியிருப்பதாக கூறினார்.

பிபிசியிடம் தொடர்ந்து பேசிய தர்ஜினி, தேசிய வலைப்பந்தாட்ட அணிக்குள் தமிழ் யுவதிகள் வரவேண்டும் என்கிற தனது விருப்பத்தினையும் வெளியிட்டார்.

”தேசிய அணியில் விளையாடிய காலத்தில் போதுமான வருமானம் இல்லை. அதனால், அதிக பண நெருக்கடிகளை எதிர்கொண்டேன். இவ்வாறான துறைகளுக்குள் இனிவரும் பிள்ளைகளுக்கு அந்த நிலை ஏற்படக் கூடாது என விரும்புகிறேன். ஆகவே, யாழ்ப்பாணம் போன்ற தூர இடங்களிலிருந்து தேசிய விளையாட்டு அணிகளுக்குத் தேர்வாகும் பிள்ளைகளுக்கு, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும். தேசிய அணியில் விளையாடுகின்றவர்களுக்கு அனுசரணையாளர்கள் (Sponsors) உதவ வேண்டும்” எனவும் அவர் கூறினார்.

”நாங்கள் வெற்றிபெறும் போது – அதற்கு உரிமை கோரும் பலர், எங்கள் கஷ்டங்களில் உதவுவதில்லை” எனவும் அவர் கவலை தெரிவித்தார்.

அதேவேளை, “என்னதான் கஷ்டங்கள் வந்தாலும் அவற்றினை எதிர்கொண்டு உங்கள் இலக்கை அடையுங்கள்” எனவும் அவர் இளைஞர்களை ஊக்கப்படுத்தினார்.

இலங்கை வலைப்பந்தாட்ட தேசிய அணி வீரராக இருந்த போது, நெருக்கடியான கொழும்பு வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பின் காரணமாக – இந்த துறையை உதறி விட்டு, ஊருக்குப் போகலாம் என சிலவேளைகளில் எண்ணியதுண்டு எனவும் தர்ஜினி கூறினார். வாடகை அறையில் இருப்பது, அவற்றினை அடிக்கடி காலி செய்ய வேண்டிய நிலை ஏற்படுவது, புதிய அறையொன்றைத் தேடிப்பிடிப்பதற்கு ஏற்படும் அலைச்சல், பழைய இடத்திலிருந்து புதிய இடத்துக்கு பொருட்களை கொண்டு செல்வதிலுள்ள கஷ்டம் போன்றவை, அவ்வாறான மனநிலையை தனக்கு ஏற்படுத்தியதாகவும் அவர் கூறுகின்றார்.

”யாழ்ப்பாணத்தில் வலைப்பந்தாட்ட உள்ளக அரங்கு இல்லை. எனவே, அங்கு சகல வசதிகளும் கொண்ட வலைப்பந்தாட்ட உள்ளக அரங்கு ஒன்றை அரசு நிர்மாணித்து தர வேண்டும்” எனவும் அவர் கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அவுஸ்ரேலியாவில் தங்கியுள்ள தர்ஷினி சிவலிங்கம், இரண்டு தடவை நாட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

(நன்றி: பிபிசி தமிழ்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்