நாடாளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை: மாகாண சபை முறைமையில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும் முன்மொழிவுகள் குறித்தும் விளக்கம்

🕔 August 9, 2023

மாகாண சபைகள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து புதிய சட்டங்களை நிறைவேற்றிய பின்னர், நாடாளுமன்றம் உடன்படும் பட்சத்தில் மாகாண சபை தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கு தயாராக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (09) விசேட உரையொன்றை நிகழ்த்திய போது இதனைக் குறிப்பிட்டார்.

விகிதாசார முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாகாண சபைகளுக்கு போட்டியிடும் உரிமையை வழங்குவது, 25% அல்லது அதிகமான பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது ஆகிய முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பின்னர் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் இதன் போது கூறினார்.

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தனது உரையில் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இதனை அடைவதற்கு திறந்த மனதுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது திட்டங்களை முன்வைத்த ஜனாதிபதி, இவற்றை ஆராய்ந்து அவற்றுக்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார். மாகாண சபைகளின் வகிபாகம் மற்றும் அவற்றின் எதிர்காலம் குறித்து சுட்டிக்காட்டிய அவர், ஒரு தீர்மானத்தை எட்டுவதற்கான பொறுப்பு நாடாளுமன்றத்துக்கே உரியது என்றும் குறிப்பிட்டார்.

“அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் எதிர்ப்பது என்ற பாரம்பரிய நடைமுறையில் இருந்து எதிர்க்கட்சிகள் விலகிச் செல்ல வேண்டும்” எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

Comments