பறிக்கப்பட்ட எம்.பி பதவியை மீண்டும் பெறுகிறார் ராகுல் காந்தி

ராகுல் காந்தி – இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தொடர நாடாளுமன்றச் செயலகம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றம் செல்லவுள்ளார்.
‘மோடி’ எனும் பெயரை சர்சை ஏற்படுத்தும் வகையில் – ராகுல் காந்தி பேசியமை தொடர்பான வழக்கில், கடந்த மார்ச் மாதம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.
இருப்பினும் இந்தத் தண்டனையை கடந்த வெள்ளிக்கிழமையன்று உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதைத் தொடர்ந்து அவர் பதவியில் நீடிக்க நாடாளுமன்றச் செயலகம் அனுமதி வழங்கியிருக்கிறது. இதற்கான அறிவிப்பை நாடாளுமன்றச் செயலகம் வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக நாளை நடைபெறவுள்ள – பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம், அதற்கு பிரதமர் மோடி அளிக்கவுள்ள விளக்கம் ஆகிய நிகழ்வுகளில் ராகுல் காந்தி பங்கேற்க வாய்ப்புள்ளது.
தொடர்பான செய்தி: எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி