நாட்டை விட்டு சுமார் 02 ஆயிரம் விரிவுரையாளர்கள் வெளியேற்றம்: புதிய நியமனங்களும் இல்லை

🕔 August 5, 2023

நாட்டை விட்டு கடந்த ஒன்றரை வருடங்களில் சுமார் 2,000 விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ளனர்,

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

600 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் மேலும் சிலர் கடந்த ஆறு மாதங்களில் சேவையை விட்டுள்ளனர் எனவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

“நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் 11,900 விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும், ஆனால் 6,600 பேர் மட்டுமே உள்ளனர். பெரும்பாலான விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி நாடு திரும்பவில்லை. அவர்களில் பெரும்பாலோர் சேவையை விட்டு வெளியேறியதாக அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு அறிவிக்கவுமில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“2017 ஆம் ஆண்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் 30,000 புதிய மாணவர் சேர்ந்துள்ளனர். பின்னர், 2021 இல் 34,000 ஆக அது அதிகரித்தது. இது 2017 உடன் ஒப்பிடும்போது 50 சதவிகித அதிகரிப்பாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, புதிய விரிவுரையாளர் நியமனங்களின் எண்ணிக்கை 2017 க்குப் பிறகு அதிகரிக்கவில்லை” எனவும் பேராசிரியர் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சருடன் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. கலந்துரையாடலின் போது, தற்போதைய வரி விதிப்பினால் விரிவுரையாளர்களும் வைத்தியர்களும் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளமையை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதனால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என்றும் தெரிவித்தோம். நிதி ராஜாங்க அமைச்சரை நாம் அடுத்த வாரம் சந்திக்கவுள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், விரிவுரையாளர்களுக்கு சில நிவாரணங்களை வழங்குவதாக கடந்த மார்ச் மாதம் அரசாங்கம் உறுதியளித்த போதிலும் இதுவரையில் எதுவும் நடக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சி காரணமாக புதிய விரிவுரையாளர்களை நியமிப்பதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. ஆனால் கடந்த 6 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய விரிவுரையாளர்களுக்கு பதிலாக புதிய நியமனங்களை வழங்குமாறு ஜனாதிபதி அந்தந்த அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஆனால் பிரச்சனை என்னவென்றால், விரிவுரையாளர்களை ஏற்கனவே உள்ள தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி தேவை. அவர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி அளிக்கப்பட்டால், அவர்கள் நாடு திரும்புவதும் சந்தேகம்” என்றும் பேராசிரியர் ஜெயவர்தன கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்