இந்திய முட்டைகள் சில்லறைச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை: காலாவதிக் காலம் குறித்தும் மக்கள் சந்தேகம்

🕔 August 1, 2023

– முன்ஸிப் அஹமட்-

ந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சில்லறையாக 50 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இந்த முட்டைகள் மிகவும் சிறியவை என்றும், சராசரியாக இந்த முட்டைகள் 45 கிராம் எடையுடையவையாக இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

இதேவேளை உள்ளூர் (இலங்கை) முட்டைகள் – சந்தையில் சில்லறையாக 60 ரூபாய் வரையில் விற்கப்படுகின்றன. இந்த முட்டைகள் சராசரியாக 60 கிராம் எடை கொண்டவையாக உள்ளன.

முட்டைக்கு விதித்திருந்த அதிகபட்ச கட்டுப்பாட்டு விலையினை அண்மையில் அரசாங்கம் நீக்கியதோடு, இதன் காரணமாக முட்டையின் விலைகளில் வீழ்ச்சி ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் உள்ளூர் சந்தையில் முட்டைகளுக்கான சில்லறை விலை குறையவில்லை.

இது இவ்வாறிருக்க இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் காலாவதிக் காலம் 03 மாதங்கள் என – முட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இந்திய முட்டையொன்றில் உற்பத்தித் திகதி 12/06/2023 எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதன் காலாவதித் திகதி 12/09/2023 என்றிருந்தது.

இந்த நிலையில் முட்டையொன்று 03 மாதங்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்குமா? என்கிற சந்தேகத்தையும் பொதுமக்கள் எழுப்புகின்றனர்.

மறுபுறமாக, நீண்ட காலத்துக்கு முட்டைகளைப் பாதுகாப்பதென்றால் அவற்றினை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்திய முட்டைகள் வெளியில் வைக்கப்பட்டவாறு விற்பனை செய்யப்படுகின்றமையினை சந்தையில் காணக் கிடைக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்