‘அஸ்வெசும’வுக்கு தெரிவாகாத சுமார் 04 லட்சம் பேருக்கு, தொடர்ந்தும் சமுர்த்தி உதவி வழங்க தீர்மானம்

🕔 July 31, 2023

ஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு தகுதியற்ற 393,094 சமுர்த்தி பெறுநர்களுக்கான சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை தொடர்ந்தும் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது சமுர்த்திப் பலன்களைப் பெற்றுக்கொண்டிருக்கும் 1,280,000 குடும்பங்கள் அஸ்வசும நலன்புரிப் பலன்களுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் 887,653 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி சமர்ப்பித்த பொருத்தமான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், பயனாளிகளின் பட்டியலுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தற்போது துரிதமாக இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து , நடைமுறைகள் முடிந்ததும் புதிய விண்ணப்பங்கள் கோரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது 1,792,265 குடும்பங்கள் ‘அஸ்வெசும’ நலன்புரி நலன்களைப் பெறத் தகுதியுடையவர்களாக உள்ளதாகவும், அவர்களில் 9,046,612 பேர் நலன்புரி பயனாளிகள் பட்டியலில் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் சேமசிங்க சுட்டிக்காட்டினார். 02 மில்லியன் குடும்பங்களுக்கு ‘அஸ்வெசும’ நலன்புரிப் பலன்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைப் பரிசீலித்து இலக்கை எட்ட முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், முதியோர், நோய்வாய்ப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவுகள் முன்பு நடைமுறையில் இருந்ததைப் போலவே வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதன்படி, முதியோர் கொடுப்பனவுகளை வழமை போன்று தபால் நிலையங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். அதேவேளை, சிறுநீரக நோயாளர்களுக்கு மற்றும் ஊனமுற்றோர் கொடுப்பனவுகள் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படும்.

தற்போது முதியோர் இல்லங்கள், சிறுவர் இல்லங்கள் மற்றும் ஊனமுற்றோர் நிலையங்களில் வசிக்கும் 11,660 நபர்களும் மதகுருமார்களும் வழமை போன்று தமது நலன்புரி உதவிகளை பெற்றுக் கொள்வார்கள் என ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை சுமார் 01 மில்லியன் பேரின் கணக்கு விவரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், பயனாளிகள் பட்டியலில் உள்ள ஏனையவர்கள் பணம் பெறுவதற்கு உரிய வங்கிக் கணக்குகளை விரைவில் திறக்குமாறும் சேமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

எனவே, விடுமுறை நாட்களிலும் அரசு வங்கிகள் இந்த நோக்கத்திற்காக திறந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்