கிழக்கு ஆளுநருக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்

🕔 July 30, 2023

ல்முனையிலிருந்து திருகோணமலைக்கு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சில தனியார் பஸ்களின் அனுமதிப் பத்திரங்களை அக்கரைப்பற்று வரையில் – போக்குவரத்தில் ஈடுபடும் வகையில் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளமை காரணமாக – பாதிக்கப்பட்டுள்ள பஸ் உரிமையாளர்கள், கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, தென்கிழக்கு கரையோரப் பிரதேச பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் முதலமைச்சின் செயலாளர் என். மணிவண்ணனுக்கு மேற்படி சங்கத்தினர் கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில், ‘கடந்த பல வருடங்களாக கல்முனையிலிருந்து திருகோணமலை வரை பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த NG- 0321, NB – 7811, NE – 9716 ஆகிய இலக்கங்களையுடைய பஸ் வண்டிகளுக்கு கல்முனையிலிருந்து திருகோணமலை வரை போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான நிரந்தர அனுமதிப்பத்திரங்கள் உள்ளன. இந்த நிலையில், குறித்த அனுமதிப்பத்திரங்கள் அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை வரை, போக்குவரத்தில் ஈடுபடும் வகையில் மாற்றியமைத்து வழங்கப்பட்டுள்ளதாக, மேற்குறித்த பஸ் வண்டிகளின் உரிமையாளர்கள் மூலம் அறிந்து கொண்டோம்.

இவ்வாறு அனுமதிப்பத்திரங்கள் மாற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளமையினால், அக்கரைப்பற்று – கல்முனை வீதியில், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.

கிழக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் தற்காலிக திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர், கிழக்கு மாகாண ஆளுநரின் பெயருக்கும் செயற்பாடுகளுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

எனவே, ஆளுநரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் இவ்வாறான அதிகாரிகளின் செயற்பாடுகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும், மேற்படி பஸ் வண்டிகளுக்கு மாற்றம் செய்து வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களை உடன் ரத்துச் செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

தவறும் பட்சத்தில் திங்கள்கிழமை (நாளை 31ஆம் திகதி) கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக, கல்முனை – அக்கரைப்பற்று பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்கள் பாரியதொரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளார்கள் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்