பாகிஸ்தானில் அரசாங்க கூட்டணி கட்சிக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 40 பேர் பலி: 200க்கும் அதிகமானோர் காயம்

🕔 July 30, 2023

பாகிஸ்தானில் அரசியல் கட்சியின் பொதுக் கூட்டத்தில் இன்று (30) நடந்த குண்டுத் தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு பஜௌர் மாவட்டத்தில் ஜம்மியத் – உலமா – இ – இஸ்லாம் – ஃபாஸ்ல் (JUIF) என்ற கட்சி நடத்திய பொதுக் கூட்டத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஜாமியத்-உலமா-இ-இஸ்லாம்-ஃபாஸ்ல் கட்சி, பாகிஸ்தான் அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சியாகும்.

பலத்த காயமடைந்தவர்களில் சிலர் மாகாண தலைநகரான பெஷாவரில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்தக் குண்டு வெடிப்பில் இறந்தவர்களில் ஒருவர் – ஜம்மியத் உலமா – இ – இஸ்லாம் கட்சியின் உள்ளூர் தலைவர் மௌலானா ஜியாவுல்லா என்பவராவார்.

இதேவேளை குறித்த கட்சியின் தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் இந்த நிகழ்வில்கலந்து கொள்ளவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தையும் ஜம்மியத் உலமா-இ-இஸ்லாம் கட்சியின் தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் வழிநடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி அரசியல் கூட்டத்தில் பேச்சாளர் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்த போதே, குண்டு வெடிப்பு நடந்ததாக – சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் ஜனாதிபதி ஆரிப் அல்வி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜம்மியத் உலமா-இ-இஸ்லாம் கட்சியின் தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான், ஆப்கானிஸ்தானின் தாலிபான் குழுவின் ஆதரவாளர் என்பதும குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்