கிழக்கு ஆளுநரும் ‘மண்டைக் கோளாறு’களும்

🕔 July 22, 2023

– மரைக்கார் –

கிழக்கு மாகாணம் – முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற நிலப்பகுதி. தமிழ்பேசுவோர் மிகப் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியமாகவும் கிழக்கு உள்ளது. ஆனால், கிழக்கு மாகாண ஆளுநராக 2019ஆம் ஆண்டு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டபோது அதனை சிங்களவர்களை விடவும் அதிகமாக – கிழக்குத் தமிழர்களே எதிர்த்தனர். கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் முஸ்லிம் ஹிஸ்புல்லா.

இப்போது செந்தில் தொண்டமான் ஆளுநராக வந்துள்ளார். கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் தமிழர் இவர்தான். இவரை இப்போது முஸ்லிம்கள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். அவர் குறித்து அரசியலுக்கும் அப்பாற்பட்டு கேவலமான வார்த்தைப் பிரயோகங்களால் பேசுகின்றனர். அமைச்சர் ஹாபிஸ் நசீருடைய அண்மைய பேச்சு இதற்கான எடுத்துக்காட்டாகும்.

செந்தில் தொண்டமான் குறித்து முஸ்லிம் சமூகத்திலிருந்து சொல்லப்பட்ட குற்றச்சாட்டு, கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள ஐந்து துறைகளில்  (பொதுச் சேவைகள் ஆணைக்குழு, போக்குவரத்து அதிகார சபை, முன்பள்ளி பணியகம், வீடமைப்பு அதிகார சபை மற்றும் சுற்றுலாப் பணியகம்) எந்தவொன்றுக்கும் முஸ்லிம்களை அவர் நியமிக்கவில்லை என்பதுதான்.

இந்த நிலையில், கடந்த 19ஆம் திகதி சம்மாந்துறையைச் சேர்ந்த றனூஸ், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் முஸாரப்பின் சிபாரிசுக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டதாகவும், இந்த நியமனத்துக்கான கடிதம் இம்மாதம் 13ஆம் திகதியே தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், முஸாரப் எம்.பி இந்தியா சென்றிருந்ததால், அவர் வரும் வரை அதனை தாமதித்து வைத்ததாகவும் ஆளுநர் செந்தில் தொண்டமான் அம்பாறையில் நேற்று (21) ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது கூறினார்.

முஸ்லிம்களை ‘வெட்டிய’ அனுராதா யஹம்பத்

இதில் ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும். செந்தில் தொண்டமானுக்கு முன்னதாக – கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த அனுராதா யஹம்பத்தினுடைய பதவிக் காலத்தில், கிழக்கு மாகாணத்தின் கீழுள்ள மேற்குறிப்பிட்ட ஐந்து துறைகளில், எந்தவொன்றுக்கும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எவரும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், இப்போது கூக்குரலிடும் எவரும் அப்போது இதுபற்றி அலட்டிக்கொண்டதுமில்லை.

சம்மாந்துறையின் முன்னாள் பிரதேச செயலாளராக இருந்தவர் மன்சூர். இவர் கிழக்கு மாகாண நிருவாகத்துக்குள் – அனுராதா யஹம்பத் காலத்தில் நியமிக்கப்பட்டாலும், அதனை ஆளுநராக அவர் ஆரம்பத்தில் விரும்பவேயில்லை. இத்தனைக்கும் மன்சூர் அதற்கு மிகவும் தகுதியானவர். இறுதியில் கொழும்பிலிருந்து தொடர்ச்சியாக கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல் காரணமாகவே அனுராதா – அவரை கிழக்கு மாகாண நிர்வாகத்தினுள் அனுமதித்தார்.

இவற்றையெல்லாம் ஒரு சிங்கள ஆளுநர் செய்தபோது, அவைபற்றி – செந்திலுக்கு எதிராக இப்போது கூக்குரலிடும் யாரும் அப்போது பேசவேயில்லை.  

ஆனால், முஸ்லிம் ஒருவர் ஆளுநராக வந்தால் தமிழர்களும், தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டால் முஸ்லிம்களும் மடித்துக் கட்டிக் கொண்டு, குற்றங்குறைகள் கூறி – எதிர்க்கத் தொடங்கி விடுவார்கள். இந்த ‘மண்டைக் கோளாறுக்கு’ மருந்தில்லை.

தொல்லை கொடுக்கும் அரசியல்வாதிகள்

கிழக்கு மாகாணத்துக்கு புதிதாக ஒரு ஆளுநர் வந்தால், அவர் விரும்பியவாறு சுதந்திரமாக அவரின் கடமைகளைச் செய்வதற்கு விட வேண்டும். சற்றுக் காலம் அவரின் செயற்பாடுகளைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பின்னர் அவர் நியாயமற்று நடந்தால் விமர்சிக்கலாம்.

ஆனால் இங்கு நடப்பவை என்ன? புதிய ஆளுநர் வந்து விட்டால் இங்குள்ள தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓடோடிச் சென்று ஆளுநரைச் சந்திக்கின்றனர். அப்படியே அங்குள்ள பணியகங்கள், அதிகார சபைகள் மற்றும் ஆணைக்குழுவுக்கு தமது ஆட்களை தலைவர்களாகவும், பணிப்பாளர்களாகவும் நியமிக்குமாறு அழுத்தம் கொடுக்கின்றனர். இப்படி அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேட்கும்போது, புதிதாக வந்துள்ள ஆளுநர் – யாருடைய ஆளை, எதற்கு நியமிப்பது என – குழம்பத் தொடங்குகின்றார். ”இவரின் ஆட்களை நியமித்தால் அவர் கோபிப்பார். அவரின் ஆட்களை நியமித்தால் இவர் கோபிப்பார்” என்கிற ரெண்டுங்கெட்டான் நிலை ஆளுநருக்கு ஏற்படுகிறது. அதனால், இவை தொடர்பில் – தீர்மானம் எடுப்பதற்காக குறிப்பிட்ட ‘ஒரு காலத்தை’ ஆளுநர் எடுத்துக் கொண்டதில் தப்பில்லை.

நமது தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – தங்கள் சமூகத்துக்கு ஏதாவது செய்கிறார்களோ இல்லையோ, தங்களுக்கும் தங்கள் ஆட்களுக்கும் பதவிகளைப் பெறுவதற்காக அலைவதில் கெட்டிக்காரர்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன?

இப்போதும் கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஸாரப், அதாஉல்லா, தௌபீக், மற்றும் ஹரீஸ் ஆகியோரின் ஆட்கள் – கிழக்கு மாகாணத்தின் கீழுள்ள அதிகார சபைகள், பணியகம் மற்றும் ஆணைக்குழுக்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.  

கிழக்கு ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டு மூன்று மாதங்கள்தான் ஆகின்றன. அவர் வந்த பிறகு கிழக்கு நிர்வாகம் சோம்பல் முறித்திருக்கிறது. ஆளுநரின் அதிரடி உத்தரவுகளுக்கு ஏற்ப வேலைகளும் வேகமாக நடக்கின்றன.

செந்தில் படித்தவர், மத்திய மாகாண சபையில் அமைச்சராக இருந்தவர், கட்சியொன்றின் தலைவராகவும் பணிபுரிகின்றார். எனவே, அவருக்கு மாகாண சபையின் நெளிவு – சுழிவுகள் பற்றி மிக நன்றாகத் தெரியும். இவற்றுக்கும் மேலாக அவர் இளவயதுடையவர் என்பதால் ‘வேகமான’ ஆளுநராகவும் இருக்கின்றார்.

ஆனால் தனது பயணத்தில் அவசியமான சில இடங்களில் ‘பிரேக்’ பிடிப்பதற்கும், ‘கியர்’ மாற்றுவதற்கும் அவர் தவறியிருக்கிறார் என்பதும் உண்மைதான்.

எல்லா இடங்களிலும், எல்லா நேரத்திலும் ‘டொப் கியரில்’ வாகனத்தை அடித்துத் தூக்கி, உச்ச வேகத்தில் பயணிக்க முடியாது அல்லது பயணிக்கக் கூடாது என்பதை – ஆளுநர் செந்தில் இந்த மூன்று மாதங்களில் கற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார் என்பதை அவரின் அண்மைக்கால அணுகுமுறைகளில் அவதானிக்க முடிகிறது. காலம் – இதனை அவருக்கு இன்னும் கற்றுக் கொடுக்கும்.

அவை ஒருபுமிருக்க, தமிழ் பேசும் ஓர் ஆளுநரைப் பயன்படுத்தி – கிழக்கிலுள்ள தமிழ் பேசும் இரண்டு சமூகங்களும் உச்ச பயன்களைப் பெறுவது குறித்து இந்தத் தடவையாவது யோசிக்க வேண்டும். இரண்டு சமூகங்களிலுமுள்ள ‘மண்டைக் கோளாறு’கள் அதற்கு ‘லேசில்’ விடமாட்டார்கள். ஆனால் அதனைத் தாண்டுவதில்தான் தமிழ் – முஸ்லிம் சமூகங்களின் வெற்றி தங்கியிருக்கிறது.  

Comments