தேன் எடுக்கும் தொழில்; கசப்பான வாழ்க்கை: தமிழர்களால் புறக்கணிக்கப்படும் தமிழ் பேசும் வேடுவர்கள்

🕔 July 18, 2023
தேன் எடுக்கும் வேடுவர்

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) –

லங்கையின் ஆதிகுடிகளாக வேடுவர்கள் (வேடர்கள்) அறியப்படுகின்றனர். வேடுவ மொழியினையும் சிங்கள மொழியினையும் பேசுகின்றவர்களாகவே வேடுவர்களை பெரும்பாலானோர் தெரிந்து வைத்துள்ளனர்.

ஆனால், இலங்கையின் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் வேடுவர்களும் வாழ்கின்றமை அதிகமானோருக்குத் தெரியாது. தமது மூதாதையர்களின் வாழ்க்கை முறைமை, பண்பாடு, வழிபாடுகள் போன்றவற்றினை பெரும்பாலும் இழந்து வாழும் இந்த மக்கள் கூட்டத்திடம், வேடுவர்களுக்கேயுரிய அம்சங்களென சில விடயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ‘சந்தோசபுரம்’ எனும் கிராமத்திலுள்ள வரதன் – வேடுவர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் வேடுவர்களுக்கான ‘குவேனி பழங்குடியினர் நலன்புரி அமைப்பின்’ செயலாளராக பணியாற்றுகின்றார். திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் மற்றும் வெருகல் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 11 வேடுவர் கிராமங்களை ஒன்றிணைத்து, இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

குவேனி என்பவர் யார்?

கிறிஸ்துவுக்கு முன்னர் 5ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து விஜயனும் அவரின் நண்பர்களும் இலங்கைக்கு வந்தபோது, இயக்கர் குலப் பெண்ணான குவேனியைக் கண்டு அவரைத் திருமணம் செய்து கொண்டதாக பௌத்தர்களின் புனித நூலான மகாவம்சம் கூறுகிறது.

இந்த வரலாற்றுப் பின்னணியின் அடிப்படையில், இலங்கையை ஆட்சிபுரிந்த விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த குழந்தைகளின் வழித்தோன்றல்களே தாங்கள் என, வரதன் கூறுகின்றார். ஆனால் இதனை நிரூபிப்பதற்கான சான்றுகள் எவையும் அவர்களிடமில்லை. இருந்தபோதும் அவர்களின் பிறப்புச் சான்றிதழில் ‘சாதி’ எனும் பகுதியில் ‘வேடர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குவேனி மற்றும் விஜயன்

வேடர்களின் வாழ்க்கை – சாதாரண மக்களின் வாழ்க்கை முறையிலும் வேறுபட்டதாக ஆதியில் இருந்தது. காட்டில் அல்லது காட்டை அண்டிய பகுதிகளில் இவர்கள் வாழ்ந்தனர். மிருகங்களை வேட்டையாடுதல், காட்டில் தேன் எடுத்தல் போன்றவை இவர்களின் பிரதான தொழில்களாக இருந்தன.

ஆனால், பல தசாப்தங்களுக்கு முன்னர் வேடர்களும் காட்டிலிருந்து வெளியே வந்து – சாதாரண வாழ்க்கை முறைக்கு பழகி விட்டனர். அவர்களின் தொழில்களும் மாறி விட்டன. ஆனால் காட்டுக்குச் சென்று தேன் எடுக்கும் மூதாதையர் தொழிலை மட்டும், இன்னும் இவர்கள் கைவிடவில்லை.

காட்டிலிருந்து வெளியேறிய நிலையில், சிங்களவர்களை அண்மித்து வாழும் வேடுவர்கள் – சிங்களவர்களாகவும், தமிழர்களின் பிரதேசங்களுக்கு அருகாமையில் வாழ்கின்றவர்கள் தமிழர்களாகவும் அடையாளம் பெற்றனர் அல்லது அடையாளப்படுத்தப்பட்டனர். அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழ் பேசும் வேடுவர்கள் – தமிழர்களாகவே பார்க்கப்படுகின்றனர்.

தமிழர்களால் ஏற்கப்படாத வேடுவர்கள்

ஆனாலும், “வேடுவர்கள் இன்னும் ஒதுக்கப்பட்ட சமூகமாகவே உள்ளனர்” என்கிறார் சாலையூரைச் சேர்ந்த சிறிசெல்வம். இவர் குவேனி பழங்குடியினர் நலன்புரி அமைப்பின் பொருளாளர். “வேடுவர்கள் இப்போதும் ஏளனமாகவே பார்க்கப்படுகின்றனர். அதனால் எங்கள் சமூகத்தவர்களில் கணிசமானோர் தம்மை ‘வேடுவர்’ என அடையாளப்படுத்த விரும்புவதில்லை. தங்களை ‘தமிழர்’ என்றே பெரும்பாலும் சொல்கின்றனர். ஆனால் – தமிழர் சமூகம், வேடுவர்களை ‘தமிழர்’களாக ஏற்றுக்கொள்வதில்லை” என்கிறார் சிறிசெல்வம்.

சிறிசெல்வம் (குவேனி பழங்குடியினர் அமைப்பின் பொருளாளர்)

இருந்தபோதும் தேர்தல் காலங்களில் – வேடுவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, அவர்களை ‘தமிழர்கள்’ என தமிழ்க்கட்சிகள் கூறி, அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகின்றார்.

“இயக்கத்தின் (தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர்) ஆதிக்கத்தில் எமது கிராமங்கள் இருந்தபோது, சாதிப் பாகுபாடுகள் பெரிதாகப் பார்க்கப்படவில்லை. ஆனால் இயக்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த எவரும், வேடுவப் பெண்களை திருமணம் செய்து கொண்டதில்லை” எனவும் சிறிசெல்வம் கூறுகின்றார்.

முன்னோரை வழிபடுதல்

வேடுவர்கள் – இயற்கையினையும் தமது மூதாதையினரையும் வணங்குவதை தங்களின் வழிபாட்டு முறையாகக் கொண்டவர்கள் என்கிறார் திருகோணமலை – நல்லூரில் வசிக்கும் வேடுவர்களின் மூத்த பிரஜைகளில் ஒருவரான மகாலிங்கம்.

அதேவேளை, சைவ சமயத்திலுள்ள சில தெய்வங்களை வணங்குவதையும், சில சைவ வழிபாட்டு முறைகளையும் சேர்த்து, இங்குள்ள வேடுவர்கள் இப்போது பின்பற்றி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

குஞ்சுப் பாப்பா சாமி அல்லது கப்பல் தெய்வம், பெரிய சாமி, மேனாட்சியம்மன் (மீனாட்சியம்மன் அல்ல) மற்றும் கோம்பனாட்சி போன்றோரை வேடுவர்கள் வணங்குகின்றனர். இவர்கள் தமது மூதாதையர் என்கிறார் மகாலிங்கம்.

ஆனால், இந்த மூதாதையருக்கென உருவங்கள் எவையும் இவர்களிடம் இப்போது இல்லை. மேனாட்சியம்மனுக்கான பாடலொன்றினையும் இதன்போது மகாலிங்கம் பாடிக்காட்டினார். வேடுவர்களின் வரலாறு தொடர்பான பாடலொன்றினையும் மகாலிங்கம் நினைவில் வைத்துப் பாடுகிறார். அந்தப் பாடலில் – வேடுவர்கள் எங்கெல்லாம் வாழ்ந்தார்கள் எனக் கூறப்படுகிறது.

இங்குள்ள தமிழ்பேசும் வேடுவர்கள் – தமிழ்ப் பெயர்களையே இப்போது கொண்டிருக்கின்றனர். தங்கள் குழந்தைகளுக்கும் தமிழ் பெயர்களையே வைக்கின்றனர்.

மகாலிங்கம்

ஆனால், தமது முன்னோர்களின் பெயர்கள் வேறுவிதமாக இருந்ததாக மகாலிங்கம் கூறுகின்றார். நீலர், செம்பன், குஞ்சர், வாழையப்பர், பத்தர், குண்டபெந்துபாணி, மொந்த மற்றும் முத்தபெத்தப்பா என – தங்கள் ஆண் மூதாதையர்கள் பெயர்களை அவர் சொல்கிறார். அதேபோன்று பெண் மூதாதையர்களுக்கு நீலி, பத்தி, செம்பி என்கிற பெயர்கள் இருந்ததாகவும் கூறினார்.

தங்கள் மூதாதையர்கள் ஆதிகாலத்தில் மட்டக்களப்பு – கருவப்பங்கேணி எனும் இடத்தில் வாழ்ந்ததாக குவேனி பழங்குடியினர் அமைப்பின் தலைவர் கனகரட்ணம் கூறுகின்றார். இவர் திருகோணமலை – நல்லூரைச் சேர்ந்தவர்.

“கருவப்பங்கேணியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் அவர்கள் பின்னர் இடம்பெயர்ந்தனர்.1957ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக, நாங்கள் இப்போது வாழும் நல்லூருக்கு குடிவந்தோம்” என்கிறார் கனகரட்ணம்.

பரம்பரைத் தொழிலை செய்ய முடியாத நிலை

அரசாங்கத்தின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, வேடுவர்கள் இப்போது அவர்களின் பரம்பரைத் தொழிலான வேட்டையினைக் கைவிட்டுள்ளனர். இலங்கையில் காட்டு விலங்குகளை வேட்டையாடுதல் தண்டனைக்குரிய குற்றமாக உள்ளதால், வேட்டையாடுவதிலிருந்து மிக நீண்ட காலமாகவே தாம் விலகியிருப்பதாக கனகரட்ணம் கூறுகின்றார்.

ஆனால், காட்டுக்குச் சென்று தேன் எடுக்கும் தொழிலை வேடுவர்கள் தொடர்ந்தும் செய்துவருகின்றனர். இருந்தபோதும் இந்தத் தொழிலைச் செய்வதிலும் தாங்கள் பல்வேறு இடர்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்வதாக குவேனி பழங்குடியினர் அமைப்பினர் தலைவர் தெரிவிக்கின்றார்.

“மரப் பொந்துகளிலுள்ள தேன்கூடுகளில் இருந்தே நாங்கள் தேன் எடுப்போம். பொந்துகள் சிறியவையாக இருந்தால், அவற்றினை கோடரியால் சீவி சற்று பெரிதாக்குவோம். தேன் எடுப்பதற்காக ஒருபோதும் மரங்களை நாங்கள் வெட்டி வீழ்த்துவதில்லை. ஆனாலும் தேன் எடுக்கச் செல்லும் வேடுவர்கள், மரங்களை வெட்டி வீழ்த்துவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்படுகின்றார்கள். இதற்காக பல தடவை நாங்கள் நீதிமன்றில் அபராதம் செலுத்தியுள்ளோம். காட்டில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டி, எடுத்துச் செல்வோரும் உள்னர். அவர்களையும் எங்களையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது” என்கிறார் கனகரட்ணம்.

தேன் விற்றுக் கிடைக்கும் பணம்தான் – பெரும்பாலும் இவர்களின் வருமானமாக உள்ளது. “நாங்கள் தேன் எடுப்பதிலுள்ள இடர்களை நீக்கும் வகையில், அந்தத் தொழிலைச் செய்யும் வேடுவர்களுக்கென அடையாள அட்டையொன்றினை அறிமுகப்படுத்தி, அதனை எமக்கு அரசு வழங்க வேண்டும்” எனவும் அவர் கேட்கிறார்.

கனகரட்ணம் (குவேனி பழங்குடியினர் அமைப்பின் தலைவர்)

கடந்த காலத்தில் நிலவிய யுத்தம் மற்றும் தற்போது அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, தமது மூதாதையர் செய்துவந்த தொழில்களைக் கைவிட்டுள்ள வேடுவர்கள், தங்கள் வருமானத்துக்காக நன்நீர் மீன் பிடித்தல் விவசாயம் செய்தல், விறகெடுத்தல் மற்றும் கூலித்தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவமரியாதையினால் கைவிடப்படும் கல்வி

தமிழ் பேசும் வேடுவர் சமூகம், கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக கூறுகின்றார் குவேனி பழங்குடியினர் அமைப்பின் செயலாளர் வரதன். குழந்தைகளின் கல்வியில் பெற்றோரின் அக்கறையின்மை, வறுமை மற்றும் ஏனைய சமூகத்தினரின் புறக்கணிப்பு போன்றவை இந்த நிலைக்கு முக்கிய காரணம் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

”வேடுவர் சமுதாயத்தைச் சேர்ந்த பிள்ளைகள் இருவர், அவர்களின் பகுதியிலுள்ள 5ஆம் வகுப்பு வரையுள்ள பாடசாலையொன்றில் படித்து விட்டு, 6ஆம் வகுப்புக்காக வேறு பாடசாலையொன்றில் சேர்ந்துள்ளனர். இந்தப் பிள்ளைகளை நையாண்டி செய்யும் வகையில், ஏனைய சமூகப் பிள்ளைகள் ‘வேடப்பிள்ளை, வேடப்பிள்ளை’ எனக் கூறி பரிகசித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் கடந்தவாரம் நடந்துள்ளது. இதனால், அவர்களில் ஒரு பிள்ளை இப்போது பாடசாலைக்குச் செல்வதற்கு மறுத்துள்ளது” என வரதன் தெரிவித்தார்.

திருகோணமலையில் தமிழ் பேசும் வேடுவர்கள் அதிகமாக வாழும் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வேடுவர் சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளை முழுமையாக அல்லது மிக அதிகமாகக் கொண்ட 08 பாடசாலைகள் உள்ளன.

வரதன் (குவேனி பழங்குடியினர் அமைப்பின் செயலாளர்)

அவற்றில் 05ஆம் வகுப்பு வரையுள்ள பாடசாலைகள் ஐந்து உள்ளன. 09ஆம் வகுப்பு வரையுள்ள பாடசாலை ஒன்றும், 10ஆம் வகுப்பு வரையுள்ள பாடசாலை ஒன்றும் உள்ளன. வேடுவர் சமுதாயத்தைச் சேர்ந்த பிள்ளைகள் உயர்தரம் எனும் 12ஆம் வகுப்பில் சேர்ந்து படிப்பதென்றால், ஏனைய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரும்பான்மையாக உள்ள பாடசாலைகளில் சேர்ந்தே தமது கல்வியைத் தொடர வேண்டியுள்ளது.

தமிழ் பேசும் வேடுவர்களின் நிலைமை குறித்து நல்லூரில் கிராம உத்தியோகத்தராகக் கடமையாற்றும் வி. பிரேமகாந்தன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ஏனைய சமூகத்தவர்களுக்குச் சமனான அந்தஸ்துகளும் வாய்ப்புகளும் இந்த மக்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

நல்லூரில் பிரேமகாந்தன் கடமையாற்றும் இரண்டு கிராமசேவை பிரிவுகளில் முழுமையாக வேடுவர்கள் வசிக்கின்றனர். “இந்த இரண்டு பிரிவுகளிலும் 350 வேடுவர் குடும்பங்கள் உள்ளன. மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் மேலும் பல வேடுவர் பழங்குடியினக் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை உள்ளடக்கி – குவேனி பழங்குடியினர் எனும் பெயரில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு சமூக சேவைத் திணைக்களத்தின் கீழ் இந்த அமைப்பு பதிவு செய்யப்பட்டு, இயங்கி வருகின்றது” என்றார்.

பிரேமகாந்தன் (கிராம உத்தியோகத்தர்)

வேடுவர்கள் – தேன் எடுப்பதை தொழிலாகக் கொண்டிருந்தாலும், இனிப்பாகச் சொல்லிக் கொள்ள அவர்களிடம் பெரிதாக எவையுமில்லை. ஆனால் சுற்றியுள்ள சமூகங்களால் தினமும் புறக்கணிக்கப்படுகின்றமை குறித்த கசப்பான கதைகள் – அவர்களின் கைவசம் ஏராளம் உள்ளன.

வேடுவர் சமூகப் பெண்

(நன்றி: பிபிசி தமிழ்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்