வசூலித்த பணத்தில் மோசடி: வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் இருவர் கைது

🕔 July 17, 2023

– முனீரா அபூபக்கர் –

வீட்டுக் கடன் பெற்றவர்களிடமிருந்து வசூலித்த பணத்தை தமது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில், ஹம்பாந்தோட்டை மாவட்ட அலுவலகத்தில் கடமையாற்றும் வெளிக்கடன் வசூலிக்கும் அதிகாரிகள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வீடமைப்புக் கடன் நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குருநாகல், காலி மற்றும் கண்டி மாவட்ட அலுவலகங்களில் கடமையாற்றும் மூன்று வெளிக் கடன் அறவீட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் புத்தளம் மாவட்ட அலுவலக நிரந்தர ஊழியர் ஒருவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மேலும் கூறியுள்ளது.

ஏற்கனவே வீட்டுக்கடன் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட களுத்துறை மாவட்ட அலுவலகத்தின் நிரந்தர ஊழியர்கள் நால்வர் – பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. களுத்துறை பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ஹம்பாந்தோட்டை மாவட்ட அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மோசடி செய்த தொகை 78 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகும். விசாரணைகளின் அடிப்படையில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கலாம் என சபை சுட்டிக்காட்டியுள்ளது.

பண மோசடிகள் தொடர்பான தகவல் அறிக்கையுடன், மாவட்ட மட்டத்தில் இது தொடர்பாக விசாரணை செய்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த காலத்தில், வீட்டுக் கடன் அறவிடும் நடவடிக்கைகள் மிகவும் பாதிக்கப்பட்டன. வீடமைப்புக் கடன்களை விரைவாக மீளப்பெறுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை வழங்கினார்.

அதன் பிரகாரம் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் அனைத்து மாவட்ட முகாமையாளர்களையும் அழைத்து, மாதாந்தம் 300 மில்லியன் ரூபாவை மீளப்பெறும் இலக்கை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வழங்கினார்.

தனது அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் கணக்காய்வு செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசாரணையில் தெரியவரும் அனைத்து குற்றவாளிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்