அனுமதிப் பத்திரமற்ற பயணிகள் பேரூந்துகள் தொடர்பில் ஆர்ப்பாட்டம்: களத்துக்குச் சென்ற சாணக்கியனின் நடவடிக்கைகளை குழப்ப முயற்சி

🕔 July 17, 2023

ன்னம்பிட்டி  பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும், மட்டக்களப்பில் இயங்கி வரும் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளின் பிரச்சனை தொடர்பாகவும் இன்றைய தினம் (17) தனியார் பேரூந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் இணைந்து மட்டக்களப்பு தனியார் பேரூந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

வீதி போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி 10 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும், இதன் பின்னணியில் அரசியல் உள்ளது என்றும், இதன் காரணமாகவே மன்னம்பிட்டி விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்த நிலையில் இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது சட்ட விரோதமான முறையில் இயங்கி வரும் பேருந்துகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் உயர் அதிகாரியின் அசமந்த செயற்பாட்டின் காரணமாகவே 11 உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்

இதன்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் – ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தபோது, அங்கு நுழைந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்ட இருவர் – நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பேசுவதற்கு இடையூறு செய்து ஆர்ப்பாட்டத்தைக் குழப்புவதற்கு முயற்சித்தனர். இதன்போது அங்கு சலசலப்பு ஏற்பட்டது. ஆயினும் ஆர்ப்பாட்டக்காரர்களால், மேற்படி இருவரும் அங்கிருந்து அகற்றப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது, பொலிஸாரின் உதவியுடன் பேரூந்துகளின் அனுமதிப்பத்திரங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சோதனை செய்தார்.

முறையான வீதிப்போக்குவரத்து அனுமதிப் பத்திரங்கள் இன்றி – சில பேருந்துகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றமையினால் பல்வேறு பிரச்சினைகளும் விபத்துக்களும் ஏற்படுவதாக அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்