எரிபொருள் வர்த்தகத்துக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள், இலங்கையில் சினோபெக் முதலீடு
இலங்கையில் சினோபெக் நிறுவனம் எரிபொருள் வர்த்தகத்தின் பொருட்டு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கைப் பெறுமதியில் 3203 கோடி ரூபா) முதலீடு செய்துள்ளது.
இலங்கையில் எரிபொருள் விநியோகத்துக்கான நிரப்பு நிலையங்களை அமைத்து, இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் சினோபெக் எனர்ஜி லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் இலங்கை முதலீட்டு அதிகாரசபை ஆகியவை கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், சினோபெக் நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை எரிபொருளின் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விற்பனையை உள்ளடக்கிய திட்டத்தில் முதலீடு செய்துள்ளது.
இந்த முயற்சியில் தற்போது பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தால் நிர்வகிக்கப்படும் 150 தனியாருக்கு சொந்தமான எரிபொருள் விற்பனை நிலையங்கள் வழங்கப்படவுள்ளதோடு, 50 புதிய எரிபொருள் நிலையங்களை அமைப்பதும் அடங்கும் என்று முதலீட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கு அமைய 20 வருட காலம் சினோபெக் நிறுவனம் இந்த வர்த்தகத்தில் செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு மேலதிகமாக தானியங்கி கார் கழுதல், கார் சேர்விஸ் வசதிகள், இணைய வசதிகளை வழங்கும் நிலையங்கள், தானியங்கி பணம் பெறும் இடங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் போன்ற சேவைகளை வழங்குவததற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
சினோபெக் நிறுவனமானது சீனாவில் இரண்டாவது பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளராக உள்ளது. மேலும் உலகளவில் மூன்றாவது பெரிய இரசாயன நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான எரிவாயு நிலையங்களைக் கொண்டுள்ளது.