புதிய கட்சியில் மஹிந்த இருப்பார்; கோட்டா தெரிவிப்பு

🕔 January 23, 2016

Gottabaya rajapakse - 098புதிதாக உருவாகவுள்ள கட்சியில் மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாக அங்கம் வகிப்பார் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ ‘பிபிசி’யிடம் தெரிவித்தார்.

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத ஒரு அரசியல் கலாசாரம் தற்போது நிலவுவதாகவும், அதனால் பலமான எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் கோட்டா கூறினார்.

இவ்வாறு உருவாகவுள்ள கட்சியில், மஹிந்த ராஜபக்ச நிச்சயமாக அங்கம் வகிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் புதிய கட்சியொன்று உருவாகவுள்ளதாக ஊடகங்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டில் தற்போது எதிர்க்கட்சி என்று ஒன்றும் இல்லை என்று தெரிவித்த அவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஆளுங்கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றமையினால், மக்களின் நியாயமான தேவைகளுக்காக போராடுவதற்கு பலமான ஒரு எதிர்க்கட்சி தேவைப்படுவதாக அவர் கூறினார்.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் (சம்பந்தன்), மக்களின் பொதுப் பிரச்சனைகள் பற்றி பேசாமல், ஒரு பிரதேசத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது குறித்த ஒரு சமூகத்தினரின் பிரச்சனைகள் பற்றி மட்டும் பேசும் ஒருவராக இருக்கிறார் எனவும் கோட்டாபய குற்றச்சாட்டினார்.

புதிதாக உருவாக்கப்படவுள்ள கட்சியின் தலைவர் யார் என்று இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில், மக்களை ஒன்று திரட்டுவதற்காக முன்னாள் ஜனாதிபதியின் தலைமைத்துவம் முக்கியமானதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Comments