10 கோடியை இன்றும் செலுத்தாத முன்னாள் ஜனாதிபதி மைத்திரி: நீதிமன்றம் வழங்கிய அவகாசம் நிறைவுக்கு வருகிறது

🕔 July 9, 2023

ஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும்12ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

போதிய புலனாய்வு தகவல் கிடைத்திருந்தும் தாக்குதலை தடுக்க தவறியதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சரின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை, அலட்சியம் செய்தமை மற்றும் தடுக்கத் தவறியதன் மூலம் தங்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி பல்வேறு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்கள் தொடர்பாக ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் மேற்படி உத்தரவை பிறப்பித்தது.

உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்பில், மனுதாரர்களுக்கு 100 மில்லியன் ரூபாயினை மைத்ரிபால சிறிசேன நட்டஈடாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டது.

அத்துடன், பூஜித் ஜயசுந்தர மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தலா 75 மில்லியன் ரூபாயினையும், ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாயினையும், சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபாயினையும் தங்களின் தனிப்பட்ட நிதியிலிருந்து பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடாக செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் எவரும் இந்த நோக்கத்துக்காக திறக்கப்பட்ட வங்கிக் கணக்கில் தொகையை வரவு வைக்கவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, காலக்கெடுவுக்கு முன் பணத்தை வைப்பிலிட தவறினால், அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படுமென சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்