கண் சத்திர சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு, நட்டஈடு வழங்க உத்தரவு

🕔 July 3, 2023

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை மேற்கொண்ட நிலையில், ஒவ்வாமைக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நட்டஈடு வழங்குமாறு பணித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைக் கூறினார்.

நுவரெலிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்களில் 11 பேர் குணமடைந்துள்ளதோடு, இரண்டு பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்திய நிறுவனமொன்றிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் காணப்பட்ட பற்றீரியா காரணமாகவே – சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகியிருந்தனர்.

எனினும் தற்போது அந்த நிறுவனத்தின் மருந்துகள் முற்றாக பாவனையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சத்திர சிகிச்சையின் பின்னர் வலி நிவாரணியாக பயன்படுத்தப்பட்ட சொட்டு மருந்தில் காணப்பட்ட பற்றீரியா காரணமாகவே ஒவ்வாமை ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

“குறித்த மருந்து, இலங்கையில் பதிவு செய்யப்பட்ட இந்திய நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்டதாகும்.

இந்த நிறுவனம் இலங்கைக்கு கடந்த 7 ஆண்டுகளாக மருந்துகளை இறக்குமதி செய்து வருகின்றது. இலங்கைக்கு மாத்திரமின்றி 53 நாடுகளுக்கு குறித்த நிறுவனம் மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது.

எனினும், துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நட்ட ஈடு வழங்கப்படும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்