விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கவுள்ளதாக நீதிமன்றில் அறிவிப்பு

🕔 June 28, 2023

விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி 60 வயதிற்குட்பட்ட விசேட வைத்தியர்களுக்கு ஓய்வு வழங்க அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடுமாறு கோரி, 176 விசேட வைத்தியர்கள் தாக்கல் செய்த ரிட் மனு நேற்று (27) பரிசீலிக்கப்பட்டதாக போதே குறித்த விடயம் அறிவிக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது விசேட வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதை 63 ஆக அதிகரிக்க, சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர் என்று, சுகாதார அமைச்சின் செயலாளரிடமிருந்து தனக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, சுகாதார அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

எனினும் சில விசேட வைத்தியர்கள் இம்மாதம் 30 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள நிலையில், இந்த மனுவை இன்றைய தினமும் (28) பரிசீலிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இதன்படி, குறித்த மனுவை இன்றைய தினமும் பரிசீலிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்