இலங்கையில் 15 நிமிடங்களுக்கு ஒரு மரணம்; எதனால்?: செய்தியைப் படியுங்கள்

🕔 June 27, 2023
எம்.எம்.ஜி.பி.எம். றஸாட்

லங்கையில் மதுசாரம் மற்றும் புகையிலை பாவனையால் ஏற்படும் நேரடிப் பாதிப்பின் காரணமாக ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு மரணம் ஏற்படுவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றஸாட் தெரிவித்தார்.

மொத்த மக்கள்தொகையில் 14 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3 மில்லியன் பேர் மதுசாரம் பாவிப்பவர்களாகவும் 2.5 மில்லியன் பேர் புகையிலை பாவிப்பவர்களாகவும் உள்ளனர் என்று 2019ஆம் ஆண்டு இறுதியாக வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கை கூறுவதாக, றஸாட் குறிப்பிடுகின்றார்.

ஆயினும் கொவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1.6 மில்லியனாக குறைந்துள்ளதாக கணிப்பீட்டு அறிக்கையொன்று வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் சட்டவிரோதமான போதைப்பொருள் பாவனையாளர்கள் 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் உள்ளனர் என, 2019ஆம் ஆண்டின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், கோவிட் காலத்திற்குப் பிறகு இந்தத் தொகை அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

“சட்டவிரோதமான போதைப்பொருள்களில் கஞ்சா பயன்பாடே அதிகமாக உள்ளது. 5 லட்சத்து 30 ஆயிரம் சட்டவிரோத போதைப் பொருள் பாவனையாளர்களில் 53 சதவீதமானோர் கஞ்சா நுகர்கின்றனர்” என றஸாட் குறிப்பிட்டார். ஹெரோயின் பாவனையாளர்கள் 98 ஆயிரம் பேர் உள்ளனர்.

சட்டவிரோத போதைப்பொருள் பாவனையாளர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், ஒன்றுக்கு மேற்பட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

போதைப் பாவனையாளர்களுக்கு சிகிச்சை

இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பாவிப்போருக்கு சிகிச்சையளிப்பதற்கென 2007ஆம் ஆண்டின் 54ஆம் இலக்க ‘போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளித்தலும் புனர்வாழ்வளித்தலும்’ எனும் சட்டமொன்று உள்ளது. இதன் அடிப்படையில் போதைப் பொருள் பாவனையாளர்களை அவர்களது விருப்பத்துடனோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்ப முடியும்.

தமது விருப்பத்துடன் முன்வருவோருக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக இலங்கையில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் கீழ் 4 சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையங்கள் உள்ளன.

இவை தவிர 10 சிறைச்சாலைகளில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் உளவியல் ஆலோசகர்கள், போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டோருக்குத் தமது சேவைகளை வழங்குகின்றனர்.

போதைப்பொருள் பாவனையாளர் ஒருவரைக் கட்டாயத்தின் பேரில் புனர்வாழ்வு நிலையம் ஒன்றுக்கு அனுப்புவதாயின், அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர், சம்பந்தப்பட்ட நபரை புனர்வாழ்வு நிலையம் ஒன்றுக்கு அனுப்புமாறு – பொலிஸ் நிலையமொன்றில் முறைப்பாடு செய்ய வேண்டும்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் போதைப்பொருள் பாவனையாளரை பொலிஸார் கைது செய்து, வைத்திய அதிகாரியிடம் கொண்டு சென்று, அவர் போதைப்பொருள் பயன்படுகின்றவர் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெற வேண்டும். பின்னர் நீதிமன்ற உத்தரவுடன் அவரை புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்ப முடியும்.

இவ்வாறு கட்டாயத்தின்பேரில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்கள், கந்தக்காடு பிரதேசத்திலுத்திலுள்ள சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இவர்களுக்கு மொத்தமாக ஓராண்டுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும். முதல் 6 மாதங்கள் கந்தக்காடு முகாமிலும், அடுத்த 6 மாதங்கள் சேனபுர முகாமிலும் புனர்வாழ்வு வழங்கப்படும்.

அங்கிருந்து அவர்கள் வெளியேறிய பிறகும், அதிகாரிகள் ஊடாக கண்காணிக்கப்படுவார்கள் என தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளர் றஸாட் தெரிவிக்கின்றார்.

(நன்றி: பிபிசி தமிழ்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்