உள்நாட்டு கடன் மறுசீரப்பினால் ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட எந்தவொரு பொது நிதியிலும் பாதிப்பு ஏற்படாது: ஜனாதிபதி

🕔 June 27, 2023

ள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியிலும் பாதிப்பு ஏற்படாது எனவும், கடந்த காலங்களில் செலுத்தப்பட்ட உயர் ஓய்வூதிய நிதிய விகிதத்தையும் எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பானது நாட்டின் வங்கிக் கட்டமைப்பு அல்லது எந்தவொரு அரச அல்லது தனியார் வங்கியின் ஸ்திரத்தன்மையையும் பாதிக்காது. நாட்டில் உள்ள 50 மில்லியனுக்கும் அதிகமான வங்கி வைப்பாளர்களின் வைப்புத்தொகைக்கு எதுவித பாதிப்பும் எழாது என்றும், தற்போது வங்கி வைப்புத்தொகைக்கு செலுத்தப்படும் வட்டியையும் அது பாதிக்காது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் நாளை (28) விசேட அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறினார்.

இன்று (27) பிற்பகல் கம்பஹா மாவட்டச் செயலாளரின் நிர்வாக கட்டிடத் தொகுதியான ‘லக்சியனே மாளிகையை’ மக்களிடம் கையளிக்கும் நிகழ்வின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை வெளியிட்டார்.

கம்பஹா மாவட்ட மக்களுக்கு வினைத்திறன் மற்றும் முறையான அரச சேவையை வழங்கும் நோக்கில், ஏழு மாடிகளைக் கொண்ட நிர்வாகத் தொகுதிக்காக – சுமார் நான்காயிரம் மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் இறுதியில், இலங்கையின் மொத்த அரச கடன் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு) 83,700 மில்லியன் டொலர்களாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 128.3% விகிதம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 2022 ஆம் ஆண்டின் இறுதியில், மொத்த வெளிநாட்டுக் கடன் தொகை 41,500 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 63.6% ஆகும். அப்போது மொத்த உள்நாட்டுக் கடன் தொகை 42,100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 64.6% ஆகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

நாட்டின் கடனை மறுசீரமைக்காமல் பேணினால், 2035ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100%இற்கும் அதிகமான அரச கடன் இருக்கும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் நாட்டின் கடனை மறுசீரமைக்க ஏற்கனவே உடன்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் கடன் நிலைத்தன்மையை உருவாக்குவதற்கு, கடன் மறுசீரமைப்பு அவசியமானது என்றும், உள்நாட்டு கடனும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

எதிர்வரும் 5 வருடங்களில் மாத்திரம் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் – வெளிநாட்டு கடன் வழங்குநர்களிடமிருந்து பெறப்படும் எனவும், அதற்கிணங்க எமது உள்நாட்டு கடன் வழங்குநர்களும் இதற்கு பங்களிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களின் வங்கி வைப்புகளை பாதுகாக்கும் முதன்மை நோக்கத்துடன் இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் அனைத்து வங்கிகளின் வங்கி வைப்பாளர்களையும் பாதுகாப்பது பாரிய பொறுப்பு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதற்கமைய, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு முறையின்படி வங்கி வைப்பாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், வங்கி முறைமை வீழ்ச்சியடையாது எனவும், இது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பக்கூடிய மறுசீரமைப்பிற்கு வழி வகுக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார மீட்சி, வட்டி விகிதக் குறைப்பு, அரசாங்கம் இலகுவாக மானியங்கள் வழங்க முடிந்தமை, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள கடன் சுமை அடுத்த 10 வருடங்களில் குறைந்து – அதன் மூலம் கிடைக்கும் பலன்களை நாட்டு மக்களுக்கு வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

பிரான்சுக்கான கடைசி உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, பொதுநலவாய பொதுச் செயலாளர் பெட்ரிசியா ஸ்கொட்லாந்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, நெதர்லாந்து பிரதிப் பிரதமரும் முதல் மற்றும் நிதி அமைச்சர் சிக்ரிட் காக், அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஜெனட் யெலன் மற்றும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி ஆகியோருடன் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு மற்றும் இலங்கையின் நிதித்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை மாற்றியமைக்க முடிந்ததையிட்டு அனைவரும் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்காலத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கூடுதல் பங்களிப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான தொலைபேசி உரையாடலின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சாதகமான பங்களிப்பை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்ததுடன், இந்த விடயம் தொடர்பில் இந்தியாவுடன் நீண்ட கலந்துரையாடல் மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போது சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர்
கிவின் கான்ட் உடன் நடத்திய கலந்துரையாடலின் போது, இருதரப்பு மற்றும் பொருளாதார தொடர்புகளை பலப்படுத்துவதுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சீன நிதியமைச்சர் லீ கியூன் உடனான கலந்துரையாடலின் போது,நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான முன்னேற்றத்திற்கான திட்டம் குறித்து ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார். நெருக்கடி நிலையில் சீனா வழங்கிய ஒத்துழைப்பிற்கு அமைச்சர் அலி சப்ரி நன்றி தெரிவித்தாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த விஜயத்தின் போது, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவினால் நியமிக்கப்பட்டுள்ள சைனா எக்சிம் வங்கியின் தலைவர் வூ புலின்மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது. கடன் மறுசீரமைப்பிற்கு உச்ச பங்களிப்பு அளிப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, நளின் பெர்னாண்டோ, ராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர, சிசிர ஜெயகொடி, லசந்த அழகியவன்ன, ஜானக வக்கம்புர, கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஹன் பிரதீப், நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் லான்ச, சுதர்ஷனி பெணான்டோபுள்ளே, மிலான் ஜெயதிலக, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்