கனடாவுக்கான மாணவர் வீசா தொடர்பில் மோசடி: 05 பெண்கள் உட்பட 06 பேர் கைது

கனடாவுக்கு ‘மாணவர் வீசா’ வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளின் அடிப்படையில், கொழும்பு நிதி குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே – குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோட்டை நீதவான் நீதிமன்றில் இருந்து தேடுதல் உத்தரவைப் பெற்றுக் கொண்ட பொலிஸ் அதிகாரிகள், கடவத்தையில் வீசா நடைமுறைக்கு போலி ஆவணங்களை வழங்கும் வியாபாரத்தை நடத்தி வந்த கட்டிடமொன்றை நேற்று சுற்றிவளைத்துள்ளனர்.
03 கணினிகள், 03 மடிக்கணினிகள், 04 பிரிண்டர்கள், 01 ஸ்கேனர், பல நிதி அறிக்கைகள், வங்கிக் கடவுச்சீட்டுகள், போலி ஆவணங்கள், உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் 11 லட்சத்து 87,130 ரூபா பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரும் வத்தளை, ராகம மற்றும் களனி பிரதேசங்களைச் சேர்ந்த 47, 45, 31, 28 மற்றும் 23 வயதுடைய ஐந்து பெண்களும் அடங்குவர்.
வெளிநாட்டு வீசாக்களை நாடும் நபர்களுக்கான நிதி நிலை அறிக்கைகள் மற்றும் சொத்துப் பிரகடனங்கள் உள்ளிட்ட போலி ஆவணங்களை இந்தக் குழு தயாரித்து வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.