அதிகூடிய பகுதிகளுக்கு குழாய் நீரை வழங்கும் மாவட்டமாக அம்பாறை மாறவுள்ளது: அமைச்சர் ஹக்கீம்

🕔 January 23, 2016

Hakeem - Central camp - 01
– மப்றூக் –

லங்கையில் ஆகக் கூடுதலான பகுதிகளுக்கு குழாய் இணைப்பு மூலம் நீரை வழங்குகின்ற மாவட்டமாக அம்பாறை மாவட்டம் மாறவுள்ளதாக நகர திட்டமிடம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், மு.காங்கிரசின் தலைவருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் 85 சதவீதமான பிரதேசங்கள் நேரடியாக குழாய் இணைப்பின் மூலம் நீரைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான செயற்திட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும், இதன் மூலம் மேற்படி அடைவினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் குடிநீர் விநியோகத்தை ஆரம்பித்து வைத்து, அங்கு நீர்வழங்கல் அதிகார சபையின் பிரதேச அலுவலகப் பொறுப்பதிகாரிக்கான கட்டிடத்தினையும் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஜே. நஸ்ருல் கரீம் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரத அதிதியாகப் பங்கேற்று உரையாற்றும்போதே, அமைச்சர் ஹக்கீம் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்ளூ

மத்திய முகாம் பிரதேசத்துக்கான நீர்வழங்கல் திட்டத்தை அடையாள ரீதியாக நாங்கள் இன்று ஆரம்பித்து வைத்துள்ளோம். தற்போது, 50 நீர் இணைப்புக்களை நாங்கள் கொடுத்திருக்கின்றோம். ஆயினும், இந்த மாதத்துக்குள் 500 இணைப்புக்களாக நாங்கள் அதிகரிக்கவுள்ளோம். மொத்தமாக 8000 இணைப்புகள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளன.

பக்கியல, சடயந்தலாவ மற்றும் கோணேஷபுரம் உட்பட சகல இன மக்களும் நீரைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த இணைப்புகள் வழங்கப்படும். அதற்கிணங்கவே, இந்த செயல் திட்டத்தை நாம் வடிவமைத்திருக்கிறோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களும், இந்த செயற்திட்டத்தினால் நன்மையடையவுள்ளன. ஆனால், இதை நாடாளுமன்றத்தில் ஒரு குற்றச்சாட்டாக சிலர் முன்வைத்தனர். அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்கின்ற நீரிணைப்பு செயல் திட்டத்தினை, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஸ்தரித்துள்ளதன் மூலம், அம்பாறை மாவட்டத்துக்கான நீரை, நாங்கள் வேறு பகுதிக்கு திருப்பி அனுப்புகின்றோம் என்கிற குற்றச்சாட்டுக்கள் வரவு – செலவுத் திட்ட விவாதத்தின்போது நாடாளுமன்றத்தில் எனக்கெதிரான விமர்சனமாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்டது.

அந்தக் குற்றச்சாட்டுக்குரிய தெளிவான விளக்கங்களை நாம் கொடுத்திருந்தோம். எங்களுக்கு இந்தத் திட்டத்துக்கான போதிய கொள்ளளவு நீர் உள்ளது. அதனால், மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்திலுள்ள சில ஊர்களுக்கும் இந்த நீழ் வழங்கல் திட்டத்தின் மூலம், குழாய் நீர் இணைப்புக்களை விஸ்தரிப்பதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுகுpன்றவர்களுக்கு நிவாரணம் வழங்குகின்ற நோக்கில், குழாய்நீர் மூலம் நீர் வழங்கும் திட்டடங்களை விஸ்தரிக்கும் முயற்சிகள் மிக விரைவாக முன்னெடுக்கப்படுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் நாமல்ஓய, தமண உள்ளிட்ட பகுதிகளுக்கும் குழாய்நீரை விரைவில் வழங்குவதற்கான அவசர வேலைத்திட்டங்களில் இறங்கியுள்ளோம்.

குழாய் நீரை வழங்கும் பொடுட்டு, மத்திய முகாமிலுள்ள உள்வீதிகளில் இன்னும் முழுமையாக குழாய்களை பதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது மத்திய முகாம் பகுதியில் மொத்தமாக 102 கிலோமீற்றர் தூரத்துக்கு குழாய்களைப் பதித்துள்ளோம். இதற்கு மேலதிகமாக இன்னும் 400 கிலோமீற்றர் தூரமளவுக்கு குறுக்குப் பாதைகளில் குழாய்களைப் பதிப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி கோரியுள்ளோம். இதற்கு சுமார் 8000 மில்லியன் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்தத் திட்டத்தினை நாங்கள் செய்து முடிக்கின்றபோது, அம்பாறை மாவட்டத்தின் 85 சதவீதமான பிரதேசங்கள் நேரடியாக குழாய்நீரைப் பெற்றுக் கொள்ளும்.

இந்த இலக்கு நிறைவேறினால், இலங்கையில் ஆகக் கூடுதலான பகுதிகளுக்கு குழாய் இணைப்பு மூலம் நீரை வழங்குகின்ற மாவட்டமாக அம்பாறை மாவட்டம் மாறி விடும்.

எங்களுடைய மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் காலத்தில் மிகப்பெரிய நீர் வழங்கல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்பிறகு சகோதரர் அதாஉல்லாவின் காலத்திலும் ஒரு சில வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. என்னுடைய காலப்பகுதியில் மிகுதியாகவுள்ள பகுதிகளுக்கு பூரணமாக குழாய் நீரை வழங்குகளின் பணியினை நிறைவேற்றவுள்ளேன். குழாய் நீரை இவ்வாறு வழங்குவதில் எவ்வித பாகுபாடுகளும் பார்க்கப்பட மாட்டாது.

இதேவேளை கல்முனை, நற்பிட்டிமுனை மற்றும் மருதமுனை போன்ற பிரதேசங்களுக்கு நீரைக் கொண்டு செல்வதற்கான குழாயின் விட்டத்தினை அதிகரித்து, நீரை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். ஆயினும், வீதி அதிகாரசபையின் அனுமதி கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆயினும், அடுத்த வாரத்துக்குள் இந்த அனுதி கிடைத்து விடும்’ என்றார்.

இந் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், அமைச்சரின் இணைப்பாளர் றஹ்மத் மன்சூர், மு.காங்கிரசின் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். கரன், நீழ்வழங்கல் அதிகார சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.Hakeem - Central camp - 02Hakeem - Central camp - 03Hakeem - Central camp - 05Hakeem - Central camp - 04

Comments

புதிது பேஸ்புக் பக்கம்