ஊடக நெறிமுறைகள் தொடர்பில் பயிற்சிப்பட்டறை

🕔 June 17, 2023

– நூருல் ஹுதா உமர், பாறுக் ஷிஹான் –

‘சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிரும்போது ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் ஒன்றிணைதல்’ எனும் தொனிப்பொருளில் தமிழ்மொழி மூல ஒரு நாள் பயிற்சி பட்டறை மாளிகைக்காடு பாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் இன்று (17) இடம்பெற்றது.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பயிற்சிப் பட்டறைக்கு சுவீடனை தலைமையகமாக கொண்ட டயகோனியா நிறுவனம் அனுசரணை வழங்கியது.

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர் இதில் கலந்துகொண்டனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. அஸ்லம் சஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாநிதி. எம்.சி. றஸ்மின் வளவாளராகவும், விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ் துணை வளவாளராகவும் கலந்துகொண்டனர்.

கருத்து வேற்றுமை, தனியுரிமை, பரபரப்பு, அநாமோதய தகவல் மூலங்கள், சமூக ஊடகம் மற்றும் உறுதிப்படுத்தல் போன்ற விடயங்களை மையமாக வைத்து – இதன்போது வளவாளரால் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், சமூக ஊடகம் மற்றும் இலத்திரணியல் ஊடகம் போன்றவற்றின் நெறிமுறைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் மேற்படி நெறிமுறைகள் தொடர்பில் பங்குபற்றியோரிடமிருந்து கருந்துகள் பெறப்பட்டு, எதிர்காலத்தில் பிராந்திய ரீதியாக ஊடக நெறிமுறைகளை ஊக்குவிக்கும் செயற்திட்டமும் வரையப்பட்டது.

தவறான தகவல், பரபரப்பு தகவல், புனைதல், போலியான தகவல், சரிபார்ப்பு இல்லாமை, தகவல்களை உறுதிப்படுத்தாமை, வெறுக்கத்தக்க பேச்சுகளைப் பரப்புதல், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் இன்னோரன்ன விடயதானங்களில் கவனம் செலுத்தப்பட்டு நடத்தப்பட்ட இப்பயிற்சிப் பட்டறையில், நெறிமுறை உட்குறிப்பு, ஊடக நெறிமுறையில் வித்தியசமான அணுகுமுறைகளைக் கையாளுதல், நெறிமுறையைப் பின்பற்றுவதில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் அதற்கு முன்னோக்கியதான பாதை அத்துடன் எதிர்காலத்துக்கான சிபாரிசுகள் போன்ற விடயங்களில் பங்குபற்றுநர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு – அவை குறித்து விரிவாகப் பேசப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்