மகளின் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 71 வயது தாத்தா
– க. கிஷாந்தன் –
பேத்தியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 71 வயதான தாத்தா (தாயின் தந்தை) ஒருவரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த சம்மந்தப்பட்ட பிள்ளையின் தாய் தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக ஒன்றரை வருடத்திற்கு முன்பு வெளிநாடு செல்லும் பொழுது, தனது பெண் பிள்ளையை, பதுளை ஹாலிஎல பகுதியில் உள்ள தனது அப்பாவிடம் (சிறுமியின் தாத்தா) ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.
சந்தேக நபரான 71 வயதுடைய முதியவர், தனது பாதுகாப்பில் வைத்திருந்த 11 வயதான தனது பேத்தியை சுமார் ஒன்றரை வருடம் பதுளை ஹாலிஎல உடுவர பகுதியிலுள்ள தனது வீட்டில் வைத்து, இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ளார். இதேவேளை, இவ்விடயத்தை வெளியில் சொல்லவேண்டாம் எனவும் பாதிக்கப்பட்ட பிள்ளையிடம் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஒன்றரை வருடம் கழிந்த நிலையில், சுகயீனம் காரமணாக நாடு திரும்பிய குறித்த தாய், தனது பிள்ளை இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு பிள்ளையின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் காணப்பட்டதால் அதிர்ச்சியடைந்த தாய், தனது பிள்ளையை அழைத்து கொண்டு தனது சொந்த ஊரான பொகவந்தலாவ பிரதேசத்திற்கு வந்துள்ளார்.
மகளிடம் காணப்பட்ட மாற்றங்கள் குறித்து, தாய் கேட்டபோதும், மகள் எதுவும் கூறவில்லை. இதனையடுத்து தாய் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிறுமியை அனுமதித்த போது, வைத்தியரிடம் குறித்த சிறுமி தாத்தா தன்னை துஷ்பிரயோகம் செய்து வந்தமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, சிறுமியின் தாய் இன்று வெள்ளிக்கிழமை பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாட்டை பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் சிறுமியை பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதித்து, வைத்திய பரிசோதனை மேற்கொண்ட போது, சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை உறுதியாகியிருப்பதாக பொகவந்தலாவ வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே. ஜெயசூரிய தெரிவித்தார்.
இந்த நிலையில், மேலதிக பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு குறித்த பிள்ளை மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனையடுத்து, இசம்மந்தப்பட்ட சந்தேக நபரான 71 வயது தாத்தாவை கைது செய்வதற்காக ஹாலிஎல பொலிஸ் நிலையத்திற்கு, ஆவணங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேஷி தர்மபிரிய தெரிவித்தார்.