தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ராஜிநாமா: ஜனாதிபதியின் பேச்சு காரணமா?

🕔 June 12, 2023

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சின் செயலாளருக்கு பேராசிரியர் அனுர மானதுங்க அறிவித்துள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி என்ற ரீதியில் தாம் வழங்கிய கட்டளைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், பேராசிரியர் மானதுங்க பதவி விலக வேண்டும் என – அண்மையில் பேராசிரியர் மானதுங்கவிடம் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமையை அடுத்து, அவர் ராஜிநாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முல்லைத்தீவு வரலாற்று குருந்தி மகா விகாரைக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலப்பரப்பு அநுராதபுர காலத்தின் ஆரம்ப காலத்தை சித்தரிக்கும் தொல்பொருள் எச்சங்களுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அதனை நில அளவை செய்யுமாறு நில அளவை பணிப்பாளரிடம் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட பிரதேசத்தில் 05 ஏக்கருக்கும் அதிகமான நெற்செய்கை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜூன் 08 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது – அந்த நெற்செய்கை இடங்களை மக்களுக்கு விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த பேராசிரியர் மானதுங்க, தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் வரும் சட்டங்களின்படி தன்னால் அவ்வாறு செய்ய முடியாது என சுட்டிக்காட்டியிருந்தார்.

தொல்பொருள் திணைக்களம் புராதன இடிபாடுகளை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், 05 ஏக்கர் நெற்பயிர்களுக்கு மாத்திரமே உரிமை கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆதாரங்களின்படி, உரிமையாளர் (இவர் 100 ஏக்கருக்கும் அதிகமான நெல் வயல்களின் உரிமையாளர் என்று கூறப்படுகிறது), மேற்படி 05 ஏக்கரை தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்குவதற்கு ஆரம்பத்தில் தயாராக இருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்