சிக்கலில் மாட்டியுள்ள 618 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்: சட்ட நடவடிக்கைக்கும் பணிப்பு

🕔 June 8, 2023

ப்பந்த நிபந்தனைகளை மீறிய எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்கள் தொடர்பில் மீளாய்வு செய்து, அவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தபானம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன களஞ்சிய முனைய அதிகாரிகளுடன் நேற்று (07) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் 1050 எரிபொருள் நிலையங்களில் 432 எரிபொருள் நிலையங்கள் மட்டுமே கடந்த வாரம் அனைத்து எரிபொருள்களிலும் குறைந்தபட்ச இருப்பைப் பேணியதாக தெரியவருகிறது.

255 எரிபொருள் நிலையத்தினர் எந்தவொரு எரிபொருளினதும் குறைந்தபட்ச இருப்பினை பேணுவதற்குத் தவறியுள்ளனர் எனவும், அதே நேரம் 363 விநியோகஸ்தர்கள் ஒரு எரிபொருளின் குறைந்தபட்ச இருப்பை மட்டுமே பேணியுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஒப்பந்தங்களை மீறியவர்களுக்கு எதிராக – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு அறிவுறுத்தப்பட்டதாக அமைச்சர் விஜேசேகர கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்