குடும்பத்துடன் ‘பிக்பொக்கட்’ அடித்து வந்த நபர் கைது: 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 20 கைத்தொலைபேசிகளும் மீட்பு

🕔 June 8, 2023

னைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் பஸ்ஸில் ஏறி பயணிகளின் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணப்பைகளை திருடிய நபர் 5,200 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள திருடப்பட்ட 20 கைத்தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றினர்

பஸ்களில் கையடக்கத் தொலைபேசிகள் காணாமல் போனமை தொடர்பில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்திய பிலியந்தலை குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் ஹெட்டியாராச்சி, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபரை மிரிஸ்வத்தையில் வைத்து கைது செய்துள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்படும் போது – மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் அவருடன் இருந்ததாகவும், மூன்று பிள்ளைகளும் தந்தையை அழைத்துச் செல்ல வேண்டாம் எனக் கோரி அழ ஆரம்பித்ததாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

வாதுவ, பொத்துப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய சந்தேக நபர், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பிலியந்தலையில் ஏன் இருந்தார் என்பதற்கான சரியான காரணத்தை தெரிவிக்க தவறியுள்ளார்.

பஸ்களில் பயணித்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பெண்களின் கைத்தொலைபேசிகளை, சந்தேக நபர் – மிக நுணுக்கமாக திருடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட கைத்தொலைபேசிகள் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதைக் கண்டுபிடிக்க முடிந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்