ராஜகுமாரி மரணம்: வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம்

🕔 May 27, 2023

பெண் ஒருவர் தடுப்புக் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொறுப்பதிகாரி களப் படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட பதுளையைச் சேர்ந்த 41 வயதான ஆர். ராஜகுமாரி என்ற பெண் – வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்த போது உயிரிழந்தார்.

உள்ளூர் தயாரிப்பாளரின் இல்லத்தில் வீட்டுப் பணியாளராகப் பணிபுரிந்தார்.

குறித்த பெண் தனது வீட்டில் தங்க நகைகளை திருடிச் சென்றதாகக் கூறி, உயிரிழந்தர் வேலை செய்த வீட்டு உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பொலிஸ் காவலில் இருந்தபோது ராஜகுமாரி தாக்கப்பட்டதாகக் கூறி, அவரது மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர்.

பின்னர் வெலிக்கடை பொலிஸில் கடமையாற்றிய ஏழு பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனையடுத்து ஒரு உதவி பொலிஸ் பரிசோதகர், இரண்டு சார்ஜென்ட்கள் மற்றும் ஒரு கொன்ஸ்டபிள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஒரு கான்ஸ்டபிள் மற்றும் இரண்டு பெண் காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments