நிந்தவூரில் நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டித் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது
– பாறுக் ஷிஹான் –
நீண்ட காலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரான இளைஞரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளில் தரித்து வைக்கப்பட்ட துவிச்சக்கரவண்டிகள் திருடிச்செல்லப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றிருந்தன.
இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸ் குழு, இவ்வாறு காணாமல் போன துவிச்சக்கரவண்டிகளை மீட்டுள்ளதுடன், திருட்டு சந்தேக நபர் மற்றும் திருடப்பட்ட துவிச்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்தவர்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) மாலை கைது செய்துள்ளனர்.
இந்நடவடிக்கையினை நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. எம். நஜீம் தலைமையிலான சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான குணரட்ன, விசேட புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டனர்.
இதன் போது கைதான 24 வயது மதிக்கத்தக்க திருட்டு சந்தேக நபரையும், திருடப்பட்ட துவிச்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் சந்தேக நபர்களையும் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நிந்தவூர் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.